தேசிய வெசாக் பண்டிகை யாழ்.நயினாதீவில்..! குருந்துார் உள்ளிட்ட வடக்கில் உள்ள சகல விகாரைகளிலும் விசேட பூசை, 2 ஆயிரம் பேருக்கு அனுமதி..
தேசிய வெசாக் பண்டிகையை யாழ்.நயினாதீவில் நடத்துவதுடன் குருந்துார் உள்ளிட்ட வடக்கில் உள்ள 65 பௌத்த விகாரைகளில் விசேட பூசை வழிபாடுகளை நடாத்த அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெசாக் பண்டிகை சர்வதேச பண்டிகையாக அறிவிக்கும் நிலையில் இலங்கையில் இந்த ஆண்டு வெசாக்கை தேசிய ரீதியில் நயினாதீவை முதன்மைப்படுத்தி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வகையில் நயினாதீவில் மேற்கொள்ள புத்தசாசன அமைச்சு திட்டமிட்டு அதற்கான ஆயத்தக் கூட்டம் நேற்று மாலை 5.30 மணிக்கு அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராயபக்ச தலமையில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத் தீர்மானத்தின் பிரகாரம் வடக்கில் 65 விகாரைகள் உள்ளதாகவும் இவைகளில் இடம்பெறும் நிகழ்வுகளிற்கு நயினாதீவு செலவு தவிர்ந்து 35 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். அதேநேரம் மேலதிக ஏற்பாடுகள் தொடர்பில் அடுத்த கூட்டம்
3 ம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும். இதேநேரம் நயினாதீவு விகாரையில் உடன் மேற்கொள்ள வேண்டிய அமைப்பிற்கு பணிகளிற்கு ஒரு மில்லியன் ரூபா ஒதுக்குவது.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு மே 23 ஆம் திகதி முதல் மே29 வரை வெசாக் வாரமாக அனுஸ்டிப்பது. நயினாதீவு நிகழ்விற்கு கொரோனாவை கருத்தில் கொண்டு இரண்டாயிரம் பேர் வரையில் பங்கேற்பது .
நயினாதீவில் நிகழ்வு இடம்பெறும் அதேநேரம் முல்லைத்தீவு குறுந்தூர் விகாரையிலும் நிகழ்வுகள் இடம்பெறும். இதேநேரம் கிரீமலை நகுலேஸ்வரம் ஆலயத்திலும் விசேட பூசை இடம்பெறும்.
இதேநேரம் பூசைகளிற்கு அப்பால் பௌத்த மதம் தொடர்பில் தமிழ் மக்களிற்கு தெரியப்படுத்த வேண்டும். இது தொடர்பில் பாடசாலைகளில் விளக்கப்படுத்த வேண்டும். அதேநேரம் அறநெறிப் பாடசாலைகளிற்கும் இக் காலத்தில் தானம் வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பௌத்த , இந்து சமய விவகார திணைக்கள அதிகாரிகள், செயலாளர், பிரதமர் அலுவலக அதிகாரிகள், மாவட்டச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.