இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து கொழும்பில் உள்ள பிரிட்டன் துாதரகம் முன்பாக பாரிய போராட்டம்..!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரிட்டன் தலமையிலான இணை அனுசரணை நாடுகள் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் பிரேரணைக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.
கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக மக்கள் பொறுப்பு மையத்தின் உறுப்பினர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் இடம்பெற்று வருகிறது.
இம்முறை இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் அறிக்கையொன்று நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.குறித்த அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து குறித்த அறிக்கை தொடர்பாக இன்றைய தினம் விவாதம் இடம்பெறவுள்ளதுடன், இன்றைய அமர்வில், பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகளினால் இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது.
கனடா, ஜேர்மனி, வடமசெடொனியா, மலாவி, மொன்டினீக்ரோ, பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து இந்த பிரேரணையை முன்வைக்கவுள்ளன.இதில் போர் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை திரட்டுதல், ஆய்வு செய்தல்,
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி எதிர்கால விசாரணைக்கான முதற்கட்ட நடவடிக்கையாக அவற்றை மேற்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையை தயார் செய்வதற்காக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை தொடர்பிலான கூட்டு நாடுகள்,
மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து தீர்வு காணப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.