முதல்வர் விக்கியை அழைக்க இலங்கை வருகிறார் கருணாஸ்!
நடிகரும், தமிழக சட்ட மன்ற அதிமுக உறுப்பினருமான கருணாஸ் எதிர்வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.இதன் போது யாழ்ப்பாணம் சென்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக தகவல் தெரிவித்த கருணாஸ், இராமநாதபுரத்தில், முகாம்களில் உள்ள இலங்கைச் சிறுவர்களின் கல்வி வசதிக்காக கல்வி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தான் திட்டமிட்டிருப்பதாகவும், அதன் திறப்பு விழாவுக்கு தன்னலம் கருதாமல் செயற்படும் ஒரு பிரமுகரை அழைக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் எனவும் அதற்காகவே முதலமைச்சரை அழைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இராமநாதபுரம் பகுதியில் இப்போதும் ஈழத் தமிழர்களுக்கான பல முகாம்கள் உள்ளன. இங்குள்ள சிறுவர்கள் கல்வியைத் தொடர்வதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்த கருணாஸ், அவர்களின் நலன் கருதி அங்கு அவர்களுக்காக பாடசாலை ஒன்றை தான் அமைக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளையில் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகைள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக அடுத்த ஒரு சில தினங்களில் தான் புறப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கான விசாவுக்கு அவர் விண்ணப்பித்துள்ள போதிலும், அது இது வரையில் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்த அவர், கிடைத்தவுடன் ஜெனீவா செல்ல தான் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.