SuperTopAds

முன்னாள் போராளிகளை ‘கடனாளிகள் ஆக்கும்’ அமைச்சர் சுவாமிநாதன்

ஆசிரியர் - Admin
முன்னாள் போராளிகளை ‘கடனாளிகள் ஆக்கும்’ அமைச்சர் சுவாமிநாதன்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் (கொழும்பு) முகவரியிட்டு, சுயாதீன இளம் ஊடகவியலாளரும், சிவில் சமுக மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான அ.ஈழம் சேகுவேரா என்பவர், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு மடல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த மடல், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகையில் (04.03.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று) பிரசுரமாகியிருந்தது. அதன் முழுவிவரம்:

அமைச்சர் அவர்களே!

முன்னாள் போராளிகளை ‘கடனாளிகள் ஆக்கும்’ தங்கள் அமைச்சின் வாழ்வாதார உதவித்திட்டம் தொடர்பாக,

தங்கள் அமைச்சின் வாழ்வாதார உதவித்திட்டம் ஊடாக ‘முன்னாள் போராளிகள்’ கால்நடைகளை வளர்த்து தமது வாழ்வாதாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள விண்ணப்பிக்கும் போது, அந்த உதவித்திட்டத்தில் உள்ள நிர்வாக ஒழுங்குபடுத்தல் குறைபாடுகள் காரணமாக ‘குறித்த வாழ்வாதார உதவித்திட்டமே போராளிகளை நிரந்தர கடனாளிகளாக ஆக்கிய’ துன்பியல் நிலைமைகள் தொடர்பாகவும், மிகவும் மோசமான இந்த இடர்நிலைமைகளை களைந்து அவர்களது ‘வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்றுத்தீர்வுகள்’ தொடர்பாகவும், தங்களுக்கு இந்த மடலை எழுதுகிறேன்.

*** ஒரு இலட்சம் ரூபாய் (100,000) நிதி ஒதுக்கீட்டுக்குள் வாழ்வாதாரத்துக்கான கால்நடைகளை (மாடுகள்,ஆடுகள்,கோழிகள்) தெரிவுசெய்யுமாறு பயனாளிகளுக்கு பணிக்கப்படுகின்றது.

பயனாளிகளும் தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு கால்நடைகள் அமையும் வரை அலைந்து திரிந்து, பண்ணையாளர்களை தேடிக்கண்டறிந்து, தமக்கு பொருத்தமான கால்நடைகளை இனங்கண்டபின்னர், அரசாங்க கால்நடை வைத்தியரை தமது சொந்தச்செலவில் அழைத்துச்சென்று, கால்நடைகளுக்கு காது இலக்கத்தகடு இட்டு, தங்கள் அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டத்துக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள படிவத்தை பூரணப்படுத்தி, பண்ணையாளர்களிடம் உள்ள கால்நடை உரிம அட்டையை பயனாளிகள் தமக்கு உரிமம் மாற்றம் செய்து, அவற்றை கச்சேரியில் கொண்டு வந்து ஒப்படைத்த பின்னர், குறித்த கால்நடைகளை பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு, ‘மூன்று மாத காலம் வரை’ காத்திருக்குமாறு கச்சேரி உத்தியோகத்தர்களால் கூறப்படுகின்றது.

யாராவது ஒரு நபர் கூடிய சீக்கிரம் தனது செலவுக்கு பணம் தேவைப்படும் (நோய், விபத்து, சத்திரசிகிச்சை, வெளிநாட்டு பயணம், உயர்கல்வி, புதிய தொழில் முனைப்பு, கடன் பிரச்சினை) சந்தர்ப்பங்களில் மாத்திரமே, கைக்குத்தேவையான பணத்தை புரட்டுவதற்கு பல வழிகளிலும் முயன்று எதுவும் கைகூடிவரவில்லை என்றானபோது, ‘தன்னிடம் உள்ள அசையும் அசையா சொத்துகள் – துரவுகளை விற்பது’ எனும் இறுதித்தீர்மானத்துக்கு வருவார். ஆனால் இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தங்கள் அமைச்சின் உதவித்திட்டத்தின் போது ‘மூன்று மாத காலம் வரை காத்திருக்குமாறு’ பண்ணையாளர்களிடம் கூறுமாறு பயனாளிகளிடம் சொல்லப்படுகின்றது.

‘அவசர பணத்தேவை காரணமாக, அவ்வளவு காலத்துக்கு தம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று கூறும் பண்ணையாளர்கள், கூடிய சீக்கிரம் தமக்கு பணம் தந்து உதவக்கூடிய வேறு நபர்களுக்கு கால்நடைகளை விற்று, துரிதகதியில் தமது பண நெருக்கடி பிரச்சினையை சமாளித்துக்கொள்கிறார்கள்.

தீது – 01:
இவ்வாறான ஒரு துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படும்போது, மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு மனஉளைச்சலுக்கு உள்ளாகும் பயனாளிகள், தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவின் பட்டித்தொட்டி – சந்துபொந்து எங்கும் அலப்பறை செய்த மிகவும் பிரசித்தமான காமடி வசனம் ஒன்று உள்ளது. ‘மறுபடியும்… முதலில இருந்தா…?’ அதுபோல, சுற்றிச்சுற்றி ஒரு வட்டத்துக்குள்ளேயே ஓடி, மறுபடியும் மறுபடியும் தொடங்கிய இடத்துக்கே வந்து சேருகிறார்கள்.

அதாவது, மறுபடியும் வேறு ஒரு பண்ணையாளரை தேடி ஓடுகிறார்கள். அங்கும் அரசாங்க கால்நடை வைத்தியரை தமது சொந்தச்செலவில் அழைத்துச்சென்று, பண்ணையாளர்களிடம் உள்ள கால்நடை உரிம அட்டையை பயனாளிகள் தமக்கு உரிமம் மாற்றம் செய்து, அவற்றை கச்சேரியில் கொண்டு வந்து ஒப்படைத்தால்… அந்தப் பண்ணையாளருக்கும் ‘மூன்று மாத காலம் வரை’ காத்திருக்குமாறு கூறப்படுகின்றது. ‘அவ்வளவு காலத்துக்கு பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று அந்தப் பண்ணையாளரும் மறுப்பு தெரிவித்து வேறு நபர்களுக்கு (ரெடிக்காசு என்று சொல்லப்படுகின்ற கைக்காசுக்கு) கால்நடைகளை விற்றுவிட்டால், மறுபடியும் வேறு ஒரு பண்ணையாளரைத் தேடி ஓடவேண்டியிருக்கிறது. அந்தப் பண்ணையாளருக்கும் ‘மூன்று மாத கால அவகாசம்…!’ இப்படியே கூறிக்கொண்டிருந்தால், பயனாளிகளின் நிலைமை என்னாவது? இதில் உள்ள மிகவும் கொடுமையானதும், நகைப்புக்கும் உரிய விடையம் என்னவென்றால், இப்படி மூன்று மாதத்தவணை கூறிக்கூறி ஒரு வருடம் கடந்த பின்னும் கூட குறித்த பயனாளிகளுக்கு கால்நடைகளை தங்கள் அமைச்சு இன்னும் பெற்றுக்கொடுக்காதது தான்!

இதன் தாக்கத்தை நீங்கள் இன்னும் ஆழமாக உய்த்துணர வேண்டுமாயின், இந்த மடலில் கீழே உள்ள விடையங்களை தொடர்ச்சியாக வாசிப்பதை நிறுத்திவிட்டு, மேலே சென்று அங்கு நான் *** அடையாளம் இட்டுள்ள பந்தியிலிருந்து மறுபடியும் இந்த மடலை வாசிக்கத்தொடங்குங்கள். வாசித்து இவ்விடம் வந்ததும் மறுபடியும் மேலே சென்று *** அடையாளம் இட்டுள்ள பந்தியிலிருந்து மீளவும் வாசிக்கத்தொடங்குங்கள். இவ்வாறு பல தடைவைகள் மீளவும் மீளவும் வாசித்துக்கொண்டிருங்கள். இப்போது தங்களுக்கு நிலைமை புரியும் என்று நம்புகின்றேன்.

தீது – 02:
‘மூன்று மாத கால அவகாசம்’ என்று கூறும் போது சில பண்ணையாளர்கள், பயனாளிகளிடம் முற்பணம் (அட்வான்ஸ்) கேட்கிறார்கள். இது நியாயமானது தான். பண்ணையாளருக்கு ‘அவசர பணத்தேவை’ என்று பெரிய பிரச்சினை ஒன்று உள்ளது. அந்தப் பிரச்சினையிலிருந்து மீளுவதற்கு அவருக்கு ரெடிக்காசு வேண்டும். இல்லை பிரச்சினையை ஓரளவு சமாளிக்கக்கூடியளவுக்கு முற்பணமாவது கிடைக்க வேண்டும். மறுபுறம் பயனாளிகளோ… ‘கால்நடைகளை வேறு நபர்களுக்கு விற்றுவிடாமல் தடுப்பதற்காகவும், நிச்சயம் கால்நடைகளை கொள்வனவு செய்வோம் என்று பண்ணையாளருக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காகவும்’ முற்பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்குள் உந்தப்படுகின்றார்கள். இதன் காரணமாக பயனாளிகள் தம்மிடம் உள்ள நகைகளை கைக்கு அதிக பணம் தரக்கூடிய தனியார் வங்கிகள் – லீசிங் கம்பனிகளில் அடகு வைத்தோ, அன்றி தெரிந்தவர்களிடம் வட்டிக்குப்பணம் கடனாகப்பெற்றோ முற்பணத்தை செலுத்துகின்றார்கள். (முற்பணம் கொடுக்காவிட்டால் ‘மறுபடியும்… முதலில இருந்து… தொடங்க வேண்டுமே! வேறு ஒரு பண்ணையாளரைத் தேடி அலைய வேண்டுமே! அந்தப் பண்ணையாளரும், ‘தனக்கு காசு பிரச்சினை. ரெடிக்காசு வேண்டும். இல்லை முற்பணம் வேண்டும்’ என்பார். இதுதான் நிலைமை.)

ஆதலால், இந்த ஆபத்தான நடவடிக்கையில் இறங்கும் போது பயனாளிகளின் மனதில் எழும் ஒரே எண்ணம், ‘ஓரிரு மாதங்கள் தானே… அதுவரை சமாளித்துக்கொள்ளலாம். கால்நடைகளை தங்கள் அமைச்சு பெற்றுக்கொடுத்த பின்னர் அதன் வருவாயை வைத்து இதை ஈடுசெய்துகொள்ளலாம்’ என்பது மட்டுமே. ஆனால் மூன்று மாத தவணை என்று கூறிக்கூறி, ஒரு வருடம் கடந்த பின்னும் கூட குறித்த பயனாளிகளுக்கு கால்நடைகளை தங்கள் அமைச்சு பெற்றுக்கொடுக்கவில்லை என்கிறபோது, இந்த குடும்பங்கள் வருடம் முழுவதும் வட்டி கட்டிக்கட்டியே கந்தறுந்து நிரந்தர கடனாளிகளாகி விடுகின்றன.

இன்னும் விளங்கக்கூறின், ‘தங்கள் அமைச்சின் வாழ்வாதார உதவித்திட்டமே போராளிகளை நிரந்தர கடனாளிகளாக ஆக்கும்’ துன்பியல் நிகழ்ச்சி இது!

தீது – 03:
பண்ணையாளர்களிடம் ‘மூன்று மாத காலத்தவணை’ என்று கூறிவிட்டு, இக்காலத்தவணைக்குள் பயனாளிகள் கால்நடைகளை கொள்வனவு செய்யாதபட்சத்தில், சில பண்ணையாளர்கள் தாம் வாங்கிய முற்பணத்தை திருப்பிக்கொடுக்க மறுக்கிறார்கள். இல்லையேல் வாங்கிய முற்பணத்தில் அரைவாசியை மட்டுமே திருப்பித்தர முடியும் என்கிறார்கள். அன்றி, தமக்குத்தர வேண்டிய மீதிக்காசையும் கொடுத்துவிட்டு கால்நடைகளை பெற்றுச்செல்லுமாறு நிர்ப்பந்திக்கிறார்கள். கூடவே, இதில் அதீத கவனிப்புக்குரிய விசயம் இரண்டு உள்ளது. ஒன்று,

இக்காலப்பகுதிக்குள் மாடுகள் மற்றும் ஆடுகள் கன்றுகள்-குட்டிகளை ஈன்றிருந்தால், தமக்கு ஏற்பட்ட பராமரிப்புச்செலவுகள் காரணமாக கன்றுகள்-குட்டிகளை தரமுடியாது என்கிறார்கள். மனசு ஒப்பாமல் பயனாளிகள் இரந்துகேட்டால், அவற்றுக்கும் சேர்த்து மேலதிகமாக ஒரு தொகைப்பணத்தை தந்துவிட்டு எடுத்துச்செல்லுமாறு கேட்கிறார்கள். இவ்வாறு ஏமாற்றப்படும் பயனாளிகள், கொடுக்கப்படும் நெருக்குதல்கள் காரணமாக, கொடுக்க வேண்டிய மீதிக்காசையும் எங்காவது வட்டிக்கு கடனாகப்பெற்று, மொத்தக்காசையும் கொடுத்து கால்நடைகளை கொள்வனவு செய்து, மேலும் மேலும் அழுத்தும் வட்டியுடன் கூடிய கடன்தொல்லைக்குள் வீழ்ந்து சீரழிந்து விடுகின்றனர். தங்கள் அமைச்சின் உதவித்திட்ட நிதி தாமதம் ஆகஆக, பயனாளிகளின் கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் இந்த சுருக்குக்கயிறு, அவர்களின் கழுத்தை இன்னும் இன்னும் பலமாக இறுக்கிறது என்பதே நிலைவரம்!

மற்றையது,
மூன்று மாதங்கள் கழித்தோ, அன்றி வருடம் கழித்தோ, ஒதுக்கப்பட்ட காசுடன் பயனாளியையும் அழைத்துக்கொண்டு தங்கள் அமைச்சின் உத்தியோகத்தர் கால்நடைகளை கொள்வனவு செய்யக்கிளம்பும்போது, ‘மூன்று மாதத்துக்கு முன்னர் எனக்கு சரியான பணப்பிரச்சினை இருந்தது உண்மைதான். அதனால் வேறுவழியில்லாமல் கால்நடைகளை விற்பது எனும் முடிவில் இருந்தேன். அப்போது நீங்கள் பணம் தந்து உதவவில்லை. பரவாயில்லை, நண்பர் ஒருவர் பணம் தந்து உதவியதால் பிரச்சினையை சமாளித்துவிட்டேன். ரொம்ப சந்தோசம். இப்போது நான் கால்நடைகளை விற்பதாக இல்லை.’ இவ்வாறு சம்பந்தப்பட்ட பண்ணையாளர் கூறினால், இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தங்கள் அமைச்சின் உத்தியோகத்தர் எத்தகையதொரு முடிவை எடுப்பார்? சர்வசாதாரணமாக, வேறு கால்நடைகளை தேடிப்பார்க்குமாறு கூறிவிட்டு பணத்தை மீளஎடுத்துச்சென்று விடுவார். ஆனால் பயனாளியின் நிலைமையோ, அந்தோ பரிதாபம் தானே? பயனாளி, ‘மறுபடியும்… முதலில இருந்து… தொடங்க வேண்டுமே!

தீது – 04:
பயனாளிகள் கால்நடைகளை தேடியலையும் போது, பேருந்து வசதிகள் இல்லாத சில குக்கிராமங்களுக்கு முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தியே பயணிக்க வேண்டியிருக்கிறது. தமக்கு பொருத்தமான கால்நடைகளை இனங்கண்ட பின்னர், அரசாங்க கால்நடை வைத்தியரையும் தமது சொந்தச்செலவிலேயே அங்கு கூட்டிச்செல்ல வேண்டியிருக்கிறது. ‘ஒரு பண்ணையாளரைத்தேடி’ குறைந்தபட்சம் நான்கு தடவைகளுக்கு மேல் இவ்வாறு பயணிக்கும் சூழல் ஏற்படும்போது, பயனாளிகளுக்கு போக்குவரத்து மற்றும் உணவுச்செலவு அடங்கலாக ‘ஆயிரம் ரூபாய் தொடக்கம் ஐந்தாயிரம் ரூபாய் வரை’ செலவு ஏற்படுகின்றது. (மூன்று மாத காலத்தவணைக்குள் தங்கள் அமைச்சு கால்நடைகளை பெற்றுக்கொடுக்காத பட்சத்தில், அந்தப் பண்ணையாளர் வேறுநபர்களுக்கு கால்நடைகளை விற்றுவிட்டால், பயனாளிகள் வேறு பண்ணையாளர்களைத் தேடியலையும் போதும் இதைப்போல பலமடங்கு செலவுகள் தான் உண்டு.)

தீது – 05:
பயனாளிகள், அரசாங்க கால்நடை வைத்தியரை பண்ணைகளுக்கு கூட்டிச்செல்லும்போது, சில இடங்களில் அரசாங்க கால்நடை வைத்தியர்கள் தமக்குரிய பணியை (அரச சேவையை) செய்துகொடுப்பதற்கு, ‘ஆயிரம் ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை’ இருதரப்பினரிடமும் (பயனாளிகள் மற்றும் பண்ணையாளர்களிடம்) இலஞ்சம் கேட்கிறார்கள். இலஞ்சப்பணம் அல்லது கையூட்டுப்பணம் கொடுத்தால் மாத்திரமே துரிதகதியில் வேலை நடக்கிறது. இல்லாவிட்டால், கால்நடைகளை பார்வையிட்டு காது இலக்கத்தகடு இட்டு, தங்கள் அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டத்துக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள படிவத்தை பூரணப்படுத்தி, கால்நடைகளை உரிமம் மாற்றம் செய்வதற்கு, ‘பீல்ட்டுக்கு (பண்ணைகளுக்கு) நாளைக்கு போகலாம். நாளை மறுநாள் போகலாம்’ என்று நாளைக்கடத்துகிறார்கள். இலஞ்சப்பணம் அல்லது கையூட்டுப்பணம் கொடுத்தால் மாத்திரமே, ‘பீல்ட்’டுக்கு கிளம்பி வருகிறார்கள். (இந்த குற்றத்துக்கு என்னிடம் ஆதாரங்கள் நிறையவே உண்டு.)

தீர்வு:
பண்ணையாளர்களிடம் உள்ள கால்நடை உரிம அட்டையை பயனாளிகள் தமக்கு உரிமம் மாற்றம் செய்து, அவற்றை கச்சேரியில் கொண்டு வந்து ஒப்படைத்ததும், தங்கள் அமைச்சு ஒதுக்கப்பட்ட குறித்த நிதியை ‘அரசாங்க வேலை நாட்கள் 14 நாட்களுக்குள் (இரண்டு வாரங்களுக்குள்) விடுவித்து’, பயனாளிகளுக்கு கால்நடைகளை பெற்றுக்கொடுப்பதே இந்தப் பிரச்சினைகளுக்கு (கொடுவினைகளுக்கு) எல்லாம் சாலச்சிறந்த தீர்வாக அமையும்!

மெத்தக்கனிவுடனும், நிறைந்தளவு நம்பிக்கையுடனும்…
-அ.ஈழம் சேகுவேரா-

நன்றி: காலைக்கதிர் – 04.03.2018 ஞாயிற்றுக்கிழமை