இன வன்செயல்களும் பிக்குமாரும்..!
சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்ற வேளைகளில் எல்லாம் அவற்றுக்கு சிறிய எண்ணிக்கையிலான கும்பல்களே பொறுப்பாக இருக்கின்றன என்றும் பெரும்பான்மைச் சமூகத்தின் அதிகப்பெரும்பான்மையான மக்கள் இனங்களுக்கிடையில் நல்லுறவையும் அமைதியான வாழ்வையுமே விரும்புகிறார்கள் என்றும் தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் கூறுவது வழமையாகும்.கடந்த வாரம் கண்டியிலும் சுற்றுப்புறங்களிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான படு மோசமான வன்முறைகளுக்குப் பின்னரும் அவர்கள் அவ்வாறு கூறுவதைக்காணக்கூடியதாக இருக்கிறது.
பெரும்பான்மைச் சமூகத்தின் அதிகப் பெரும்பான்மையான மக்கள் சட்டம் ஒழுங்கை மதிப்பவர்கள் என்பதும் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் என்பதும் உண்மையே. அதில் மறதலிப்பதற்கு ஏதுமில்லை.ஆனால், அவர்கள் அத்தகைய கண்ணியமான வாழ்க்கை முறையைக் கொண்டவர்களாக இருக்கும்போது சிறிய எண்ணிக்கையிலான கும்பல்களினால் நாட்டில் வழமை வாழ்வைச் சீர்குலைக்கக்கூடியதாக படுமோசமான வன்முறைகளை பல நாட்களுக்கு எவ்வாறு செய்யக்கூடியதாக இருக்கிறது என்பதே மனதைக்குடையும் கேள்வியாகும்.
இந்த இடத்தில் கடந்த நூற்றாண்டின் மகத்தான மனிதர்களில் இருவரின் பெறுமதிமிக்க கூற்றுக்கள் நினைவுக்கு வருகின்றன.நவீன பௌதீகவியலின் இரு தூண்களில் ஒன்றான சார்புவேகக் கோட்பாட்டை வகுத்த விஞ்ஞான மேதை அல்பேர்ட் ஐன்ஸ்டீன் , ‘ உலகம் ஆபத்தானதாக இருப்பது கெட்ட மனிதர்களினால் அல்ல, கெடுதிகளைப் பற்றிக் கவனிக்காமல் எதுவும் செய்யாமல் இருக்கும் நல்லவர்களினால் தான்’ என்று சொன்னார்.அதேவேளை அமெரிக்க குடியியல் உரிமைகள் இயக்கத் தலைவர் மார்ட்டின் லூதர்கிங் ,’ கெட்ட மனிதர்களின் வெறுப்புப்பேச்சு மற்றும் செயல்களுக்காக மாத்திரமல்ல, திகைக்கவைக்கும் வகையில் அமைந்த நல்ல மனிதர்களின் மௌனத்துக்காகவும் நாக் இந்தத் தலைமுறையில் வருந்தவேண்டியவர்களாக இருக்கிறோம்’ என்று சொன்னார்.
வன்முறைகளின்போது சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த அயலவரகளும் நண்பர்களும் நலன்விரும்பிகளும் பாதுகாப்பு அளித்து உதவிசெய்திருக்கிறார்கள் என்பதும் உண்மையே.ஆனால், அவர்களால் வன்முறைகள் மூளாமல் முன்கூட்டியே தடுக்கக்கூடியதாக சகிப்புத்தன்மையுடனான கலாசாரத்தை ஏன் உருவாக்கமுடியாமல் இருக்கிறது?வன்முறைகள் உச்சக்கட்டத்தை அடைகின்ற வேளைகளில் எல்லாம் அவர்கள் எதுவும் செய்யமுடியாத பார்வையாளர்களாகவே இருந்துவருகின்ற துரதிர்ஷ்டவசமான சூழலில் மாற்றம் ஏற்படவேண்டியதே அவசியமாகும்.
சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் என்பது இலங்கைக்கு ஒன்றும் புதியதல்ல.அது நவீன இலங்கையின் அரசியல் வரலாற்றோடு சமாந்தரமாக வளர்ச்சியடைந்து வந்திருக்கின்ற ஒரு போக்காகும்.ஆனால் இனத்துவ அரசியல் காரணமாக மூண்ட சுமார் மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரின் விளைவான பெரும் உயிரிழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்த பின்னரும் கூட தென்னிலங்கை அரசியல் சமுதாயம் இனத்துவ அரசியலின் குறிப்பாக சிறுபான்மையினச் சமூகங்களின் உரிமைகளையும் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் மதித்து நடக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்துகொள்ளத்தவறுவது பெரும் கவலைக்குரியதாகும் .
சம்பவங்கள் நடந்துமுடிந்த பிறகு புத்திசாலிகளாகப் பேசுவது எமது அரசியல் தலைவர்களுக்கு வைரப்பெற்ற கலையாகும்.முன்னைய இன வன்முறைகளினால் இலங்கைக்கு சர்வதேச சமூகத்தின் மத்தியில் கெட்டபெயர் ஏற்பட்டது என்று கூறிய அதே அரசியல்வாதிகள் அண்மையில் அம்பாறையிலும் கண்டியிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளுக்குப் பின்னரும் அவ்வாறே கூறிக் கவலை வெளியிட்டிருக்கிறார்கள்.பொருளாதாரத்துக்குப் பெரும்பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பலம்புகிறார்கள்.முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் – மதப் பிரசாரங்கள் அண்மைய சில வருடங்களாக நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்ற போதிலும் அவற்றுக்குப் பொறுப்பான சிங்கள பௌத்த தீவிரவாத சக்கதிகளைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத்தவறியதன் விளைவாகவே தொடர்ந்தும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறக்கூடிய சூழ்நிலை நீடிக்கிறது.முன்னைய அரசாங்கம் இது விடயத்தில் இழைத்த தவறுகளில் இருந்து தற்போதைய அரசாங்கம் பாடம் எதையும் கற்றுக்கொண்டதாக இல்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பௌத்த மத வைபவமொன்றில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ‘ ஒரு சிறய எண்ணிக்கையிலான கும்பல்களே வன்முறைகளில் ஈடுபட்டிருக்கின்ற போதிலும் அந்த வன்முறைகளுக்காக முழு உலகுமே சிங்கள பௌத்தர்களைக் குற்றஞ்சாட்டியிருக்கிறது.அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தெற்காசியா முழுவதிலும் உள்ள பௌத்தர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ‘ என்று கவலை வெளியிட்டிருக்கிறார்.
ஒவ்வொரு இனவன்முறைக்குப் பிறகும் அரசாங்கத் தலைவர்களையும் முக்கியமான அரசியல் தலைவர்களையும் அழைத்து நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் இனங்களுக்கிடையில் நல்லுறவையும் உறுதிப்படுத்துவதற்கு பயனுறுதியுடைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென்று ஆலோசனை கூறுகின்ற பௌத்த மதத்தலைவர்கள் தங்களது தலைமையிலான மகாசங்கத்தின் உறுப்பினர்களான பிக்குமார்களில் கணிசமான எண்ணிக்கையிலான பிக்குமார்கள் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரங்களிலும் வனாமுறைகளிலும் முன்னரங்கத்தில் நின்று செயற்படுவதை அனுமதிக்கக்கூடாது என்று முன்கூட்டியே சிந்தித்து ஏன் செயற்படுவதில்லை.?
இலங்கையில் இடம்பெறுகின்ற இனவாத வன்முறைகளின்போது பிக்குமார் வன்முறைக் கும்பல்களைத் தூண்டிவிடுவது மாத்திரமல்ல தாங்களே நேரடியாக வன்முறைகளில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருக்கிறது.அவ்வாறு செயற்படுவதற்கு அவர்களுக்கு பாதுகாப்பை காவியுடையே கொடுக்கிறது.
அரசியலில் பிக்குமார் செல்வாக்குச் செலுத்துகின்ற நிலையே இதற்குக் காரணமாகும்.அரசியலில் இருந்து மதத்தைப் பிரிக்காவிட்டால் இலங்கைக்கு எதிர்காலமே இல்லை என்பதே உண்மையாகும்.
NEWS: tamilenews.com