வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பில் விவசாய காணிகளை மீள கையளிக்கும் நடவடிக்கை ஆரம்பம்..!
நாட்டில் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களங்களின் பிடியில் உள்ள விவசாய காணிகளை விவசாயிகளிடம் மீள கையளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர குறிப்பிட்டுள்ளார். தங்களின் பயிர்ச்செய்கை காணிகள் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களுக்கு உட்பட்டதாக காணப்படுவதால்
நீண்ட காலமாக பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக விவசாயிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தனர். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினருடன்,
நில அளவை திணைக்களமும் இணைந்து பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். GPS தொழில்நுட்பத்தினூடாக வனங்களின் எல்லைகளை அடையாளப்படுத்தியபோது
பெரும்பாலான பயிர்ச்செய்கை நிலங்கள் திணைக்கள எல்லைக்குள் அமையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, திணைக்களங்களின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படக்கூடிய பயிர்ச்செய்கை நிலங்களை விவசாயிகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.இந்த செயற்றிட்டத்தின் முதலாவது கட்டம் பொலன்னறுவையில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இதனை அமுல்படுத்தவுள்ளதாக வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.