தமிழர்களுக்கு மேலும் பெருமைநடராஜன், வாசிங்டன் சுந்தர்!! -அவுஸ்ரேலியாவுக்கு எதிராக விக்கெட் மழை-

ஆசிரியர் - Editor II
தமிழர்களுக்கு மேலும் பெருமைநடராஜன், வாசிங்டன் சுந்தர்!! -அவுஸ்ரேலியாவுக்கு எதிராக விக்கெட் மழை-

இந்திய அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வாசிங்டன் சுந்தர் ஆகியோர் தமிழர்களுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளனர். 

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

இதில் நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணியின் தலைவர் டிம் பெய்ன் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி பந்து வீச்சைத் துவங்கியது.

இதற்கிடையில் அவுஸ்திரேலியா எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக தமிழக வீரர் நடராஜன் களம் இறங்கியுள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளராக தமிழக வீரர் வாசிங்டன் சுந்தரும் இன்றைய டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக இடம்பிடித்துள்ளார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர்(1), மார்கஸ் ஹாரிஸ்(5) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த லபுசாக்னே நிலைத்து நின்று ஆடினார். மற்றொரு புறம் ஸ்டீவ் ஸ்மித் 36 ஓட்டங்களில் வாசிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து சிறப்பாக ஆடி வந்த லபுசாக்னே-மேத்யூ வேட் கூட்டணியை நடராஜன் உடைத்தார். நடராஜன் வீசிய பந்தில் மேத்யூ வேட் (45) சர்துல் தாக்கூரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 

அதனை தொடர்ந்து நடராஜனின் பந்துவீச்சில் அவுஸ்திரேலியா வீரர் லபுசாக்னே 108 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதன் மூலம் தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தில் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தமிழக வீரர்கள் இருவரும் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருப்பது, பொங்கல் பண்டிகை தருணத்தில் தமிழக ரசிகர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு