மருதனார்மடம் சந்தை அல்லது அதனோடு இணைந்த பகுதி முடக்கப்படுமா..? இன்று மாலை பீ.சி.ஆர் முடிவுகள் தீர்மானிக்கும் என்கிறார் மாகாண சுகாதார பணிப்பாளர்..
யாழ்.மருதனார்மடம் பொதுச்சந்தையை அல்லது தொற்றுக்குள்ளான நபர் நடமாடிய இடங்களை முடக்குவதா? இல்லையா? என்பதை இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் முடிவுகளின் பின் தீர்மானிப்போம். என மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், எழுமாற்றாக முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் உடுவில் பிரதேச செயலகத்திற்கு அண்மையில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில் இன்றைய தினம் சுமார் 394 போிடம் பீ.சி.ஆர் மாதிரிகளை பெற்றிருக்கின்றோம்.
அதனுடைய பெறுபேறுகள் இன்று மாலையில் வெளியாகும். அடினடிப்படையில் மருதனார்மடம் சந்தையை அல்லது தொற்றுக்குள்ளான நபர் நடமாடிய இடங்களை முடக்குவதா? இல்லையா? என்ற தீர்மானத்தினை எங்களால் எடுக்க முடியும். மேலும் தொற்றுக்குள்ளான நபருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
எனினும் அது குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்றன. குறித்த நபர் ஆட்டோ சாரதி என்பதாலும், மரக்கறி வியாபாரம் செய்பவர் என்பதாலும் அவருடன் பலர் பழகியிருக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறானவர்கள் யாழ்ப்பாண மக்களின் நலனை கருத்தில் கொண்டு உங்களுடைய குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு
உங்களை அடையாளப்படுத்துங்கள். மேலும் இந்த மாதம் 12ம் திகதிவரையில் யாழ்.மாவட்டத்தில் 5 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக வடமாகாணத்தில் 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். என அவர் மேலும் கூறியிருக்கின்றார்.