காட்டுத்தீயில் சிக்கியுள்ளவர்களை மீட்க கமாண்டோ படை விரைகிறது

ஆசிரியர் - Editor2
காட்டுத்தீயில் சிக்கியுள்ளவர்களை மீட்க கமாண்டோ படை விரைகிறது

தேனியில் காட்டுத்தீ

தேனி காட்டுத்தீயில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக கோவை சூலூரில் இருந்து, பத்து கமாண்டோக்களை அனுப்பவுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மீட்புப்பணி தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர், மலையில் சிக்கியுள்ளவர்களை மீட்க ஏற்கனவே இரண்டு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று கூறினார்.

தேனி காட்டுத்தீயில் பாதிக்கப்பட்ட 36 நபர்களும் மீட்கப்படுவார்கள் என்று தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உறுதியளித்துள்ளார்.

மலைஏறும்(trekking) பயிற்சிக்காக காட்டுக்குள் வந்தவர்கள் காட்டுத்தீயில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டுத்தீ

இரவு நேரம் என்பதாலும், மலை சரிவு பகுதியாக இருப்பதாலும், மீட்கப்படுவதில் சிரமம் உள்ளது. ஆனால் மருத்துவக்குழுவினர் விரைந்து சென்று முதல் உதவி அளித்துவருகின்றனர். மூன்று குழந்தைகள், எட்டு ஆண்கள், 25 பெண்களும் இரண்டு நாட்கள் மலைஏறுவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் திரும்பும்போதுதான் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். இந்த தீ இயற்கையாக ஏற்பட்டது அல்ல'' என மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில் பாதிக்கப்படுள்ளவர்களை நேரில் வந்து சந்தித்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதிகள் ஏற்படுத்திதரப்படும் என்றும் துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

குரங்கினி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இருந்து தப்பித்துவந்துள்ள சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமி,'' சென்னை ட்ரெக்கிங் கிளப்பைச் சேர்ந்த நாங்கள் மலை ஏற்றம் சென்றோம். ஒரு சிலர் மாட்டிக்கொண்டனர். எனக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டது. நாங்கள் பாறைக்குள் குதித்து தப்பித்துவிட்டோம். தப்பிக்கமுடியாத காரணத்தால் சிலர் மாட்டிக்கொண்டனர்,'' என ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மீட்புப் பணியில் போடி பகுதியில் உள்ள பொதுமக்களும் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிபிசி தமிழிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 12 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ''மலைப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வண்டியை செலுத்த முடியாதால், மருத்துவக்குழுவினர் நடந்துசென்று பாதிக்கப்பட்டவர்களை கொண்டுவந்தனர். தற்போது எட்டு நபர்களுக்கு போடி அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. குரங்கணி மலை மீது மருத்துவக் குழுவினர் தயாராக உள்ளனர். இரவு நேரம் என்பதால், அங்குள்ளவர்களுக்கு உடனடி முதல்உதவி கொடுக்கப்பட்டு, பின்னர் கீழே கொண்டுவரப்படுகின்றனர்,'' என தெரிவித்தார்.