SuperTopAds

இன்று மாலை அல்லது இரவு கரைக்கு நெருக்கமாக வரும்..! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை, மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள்..

ஆசிரியர் - Editor I

வங்காள விரிகுடாவில் உருவாகியிருக்கும் "புரவி" புயலானது "நிவர்" புயலை காட்டிலும் தீவிரமானதாக இருக்க வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கும் யாழ்.பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா,

புயல் மற்றும் சூறாவளி அனர்த்தங்களின் போது எம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கான சில வழிமுறைகளை முன்வைத்துள்ளார்.

புயலுக்கு முன்னர்..

மிக முக்கியமாக உங்கள் தொலைபேசிகளிலும், வலுச் சேமிப்பகங்களிலும்(Powerbank) மின்சார இருப்பை உறுதிப்படுத்துங்கள். 

ஏனெனில் புயலின் போது மின்சாரம் தடைப்படலாம். ஏனெனில் தகவல்களையும், எச்சரிக்கைகளையும் பெற்றுக் கொள்வதற்காக இது மிக அவசியம்.

01.    வீட்டின் சுவர், கூரை என்பன பாதுகாப்பாக உள்ளதா என்பதனை உறுதிப்படுத்தல்.

02.    வீட்டிலுள்ள மரங்களின் நுனிகள், கிளைகளை வெட்டி விடுதல்.

03.    புயல் காலத்தின்போது, சிலவேளைகளில் வெள்ள அனர்த்தம், சுனாமி அனர்த்தம், புயல் அனர்த்தம் அறிவிக்கப்பட்டால் பாதுகாப்பாக தங்கக் கூடிய உயரமான இடத்தினையும், அதற்கு சென்று சேரக்கூடிய வழியையும் அறிந்திருத்தல்.

04.    அவசர காலத்தில் கொண்டு செல்லக் கூடிய பொதி ஒன்றினை தயாரித்தல்.

05.    தண்ணீர்ப் போத்தல்கள் உலருணவுகள்.

06.    தீப்பெட்டி, மண்ணெண்ணெய் விளக்கு(லாம்பு)தயார்ப்படுத்தல்

07. நீர்த்தொட்டிகளை நிரப்பி வைத்திருத்தல்

08. வாகனங்களை உறுதியான இடத்ததில் நிறுத்தவும்.

09.  மரத்திலான அல்லது பிளாஸ்டிக்கிலான தளபாடங்களையும் சூறாவழியின்போது இழக்கப்படக் கூடிய பொருட்களையும் எடுத்து பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.

புயலின் போது..

01. கதவுகள் ஜன்னல்களை பூட்டவும் 

02. மின்சாரம், சமையல் வாயு என்பவற்றை நிறுத்தவும் 

03. கடும் மழையின் போது வெள்ள அபாயம் ஏற்படும் பகுதியில் நீங்கள் இருந்தால் அவசர காலத்தில் எடுத்துச் செல்ல வேண்டிய பொதியினை எடுத்துக்கொண்டு 

பாதுகாப்பான இடம் தூரத்தில் உள்ளதாயின் வேளைக்கே சென்று போக்குவரத்து நெரிசல், வெள்ள அனர்த்தம், காற்றுப் பாதிப்பு என்பவற்றை தவிர்த்துக் கொள்ளவும்.

04. புயல் வீசும்போது சகல இலத்திரனியல் பொருட்களினதும் மின் இணைப்பைத் துண்டித்து வையுங்கள்.

05.  மின்கலத்தில் இயங்கும் வானொலியை செவிமடுத்து அல்லது உங்கள் தொலைபேசி யைப் பாவித்து புயல் தொடர்பான புதிய தகவல்களை அறிய வேண்டும்.

06. பாதுகாப்பான உறைவிடத்தின் உள்ளே இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.

07. கட்டிடடம் உடைய அல்லது சரிய ஆரம்பித்தால் மெத்தைகள் மற்றும் போர்வைகளுடன் உறுதியான கட்டில் அல்லது மேசைக்கு கீழே சென்று உங்களைப் பாதுகாக்கவும்.

08. புயலின் கண்பகுதி தொடர்பாக அவதானத்துடன் இருத்தல் வேண்டும். காற்று வேகம் வீழ்ச்சியடைந்ததும் புயல் முடிவடைந்தது என முடிவெடுக்க வேண்டாம். 

வலிமையான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய காற்று வேறு திசையில் இருந்து வீசலாம். உத்தியோக பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கவும்.

09. வாகனம் செலுத்திக் கொண்டிருந்தால் வாகனத்தை நிறுத்தும்போது கடலுக்கு தூரமாகவும் மரங்கள், மின்கம்பங்கள்,

மின் கம்பிகள் இல்லாத இடத்தில் நிறுத்தவும் வாகனத்துள்ளே இருக்கலாம்.

வளிமண்டலவியல் திணைக்கள அறிவித்தல்..!

இலங்கையின் 5 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கியிருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் யாழ்ப்பணம் - பருத்துறைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் திருகோணமலைக்கு நெருக்கமாக 

இன்று மாலை அல்லது இரவு "புரவி" புயல் வரும் எனவும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுள்ளது.