முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்துக்கு இந்தியாவின் பிரதிபலிப்பு என்ன?

ஆசிரியர் - Admin
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்துக்கு இந்தியாவின் பிரதிபலிப்பு என்ன?

தயக்கத்துடன் அரசியலுக்கு வந்தாலும், நாளடைவில் தன்னைக் கோட்பாட்டுப் பிடிவாதமுடைய தமிழ்த் தேசியவாதியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிப்படுத்தி வந்திருக்கும் கருத்துக்கள் உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பின்னரான இன்றைய காலகட்டத்தில் இலங்கைத் தமிழர் அரசியலின் விவாதங்களின் திசைமார்க்கத்தை தீர்மானிப்பதில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தக் கூடியவையாக இருக்கின்றன. அவரின் கருத்துக்களின் சாதக பாதகங்கள்குறித்து மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருந்தாலும் தமிழர் அரசியல் பரப்பில் இன்றைய சூழ்நிலையில் தன்னை தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை என்ற பிம்பத்தை அவரால் ஏற்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது என்பது உண்மையே.

2013 செப்டெம்பரில் வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டு பெரு வெற்றி பெற்று அந்த மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர் என்ற பெருமையைத் தனதாக்கிக் கொண்ட முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் தன்னை அரசியலுக்குள் கொண்டுவந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடுகளில் இருந்தும் அணுகுமுறைகளில் இருந்தும் தன்னைத் தூர விலக்கிக் கொள்வதற்கு நீண்ட நாட்கள் எடுக்கவில்லை.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான ஒரு அரசியல் அணியும் தலைமைத்துவமும் தமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுகிறது என்று வாதிடுகின்ற அரசியல்சக்திகளுடன் வெகு விரைவாகவே முதலமைச்சரினால் தன்னை நெருக்கமாக அடையாளப்படுத்திக் கொள்ளவும் முடிந்தது. இலங்கைத் தமிழ் ஊடகங்கள் குறிப்பாக பத்திரிகைகள் அதீத முக்கியத்துவத்தைக் கொடுக்கின்ற ஒரு அரசியல்வாதியாக மாறியிருக்கும் விக்னேஸ்வரன் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் இந்தியாவின் வகிபாகம் குறித்து கடந்த வாரம் வெ ளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் கவனத்தைத் தூண்டுவனவாக இருக்கின்றன.

தனது தலைமையிலான சிவில் சமூக அமைப்பான தமிழ் மக்கள் பேரவையின் யாழ்ப்பாணக் கூட்டமொன்றில் முதலமைச்சர் நிகழ்த்திய உரை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காண்கின்ற விடயத்தில் இந்தியாவை எவ்வாறு அணுகுவது அல்லது பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பில் அவருடன் சேர்ந்து நிற்பவர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் இக்கின்றன என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்தது. ‘சில அரசியல்கட்சிகள் நாங்கள் இந்தியாவுடன் கிட்டிய உறவைப் பேணுவதை விரும்புகிறார்கள் இல்லை.

தமிழ் மக்களுக்கு போரின் இறுதி நாட்களில் நடந்தவற்றுக்கு இந்தியாவும் பொறுப்பு என்ற முறையில் அவர்களுக்கு அவ்வாறான ஒரு எண்ணம் இருக்கலாம். ஆனால், அன்றைய நிலைவேறு, இன்றைய நிலைவேறு. இந்தியாவின் அனுசரணையில்லாமல், வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களது நியாயபூர்வமான குறிக்கோள்களை அடைய முடியாது என்ற எண்ணம் கொண்டவர்களும் எம்மத்தியில் இருக்கிறார்கள்.

ஆகவே எம்மிடையே இதுபற்றிய கருத்து வேறுபாடுகளை நீக்குவது அவசியமாகிறது. சகல விடயங்களிலும் எம்மிடையே கருத்துதொருமிப்பு ஏற்படமுடியாது. ஆனால், ஒருவர் மற்றவரின் கருத்துக்களைப் புரிந்துகொண்டு முன்னோக்கிப் போகலாம்’ என்று விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள் மத்தியில் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் இந்தக் கருத்துக்கள் குறித்து ஊடகங்களில் குறிப்பாக சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனங்கள் எழுந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இந்தியாவின் அனுசரணையில்லாமல் இலங்கைத்தமிழர்கள் தங்களது நியாயபூர்வமான குறிக்கோள்களை அடைய முடியாது என்ற எண்ணம் கொண்டவர்களும் எம்மத்தியில் இருக்கிறார்கள் என்ற விக்னேஸ்வரனின் கூற்றுக்கு அழுத்தம் கொடுத்த சில விமர்சகர்கள் ‘எம் மத்தியில்’ என்பதில் தானும் அடங்குகிறாரா என்று கேள்வியெழுப்பியிருந்தனர்.

இத்தகைய விமர்சனங்களை பொருத்தமில்லாத வகையில் தவறாக வியாக்கியானம் செய்து கொண்டாரோ என்னவோ தெரியவில்லை அவர் அடுத்த ஒரு சில தினங்களில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதில் இந்தியாவின் முக்கியத்துவம் குறித்தும் இந்தியாவுக்கு இருக்கின்ற தார்மீகக்கடமை குறித்தும் தன்னால் முன்வைக்கப்படுகின்ற வலியுறுத்தலை இந்தியாவிடம் தான் அடிபணிந்துவிட்டதாக பிரசாரம் செய்யப்படுவதாக வருத்தப்பட்டுக் கொண்டார். இதை அவர் யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் துணைத்தூதராக கடமையாற்றி பதவிக்காலம் முடிந்து நாடும் திரும்பும் ஏ.நடராஜனுக்கு வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் அளிக்கப்பட்ட பிரிவுபசார வைபவத்திலே கூறினார் என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

‘இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் கடந்த நான்கு தசாப்தங்களாக இந்தியா ஏற்படுத்தியுள்ள பல்வேறு மட்டங்களிலான தலையீடுகள் மற்றும் இன்றைய பூகோள அரசியலில் இந்தியாவுக்கு இருக்கின்ற முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொள்ளும் எமது முயற்சிகளில் இந்தியாவுடனான நட்பு மேலும் நேர்மையுடனும் இதய சுத்தியுடனுமான பரஸ்பர அரசியல் – இராஜதந்திர நடவடிக்கைகள் அவசியமானவை. இதனை இந்தியாவுக்கு அடிபணிவதாக விமர்சனம் செய்வது பொருத்தமற்றது. இந்தியா எமக்கு முக்கியமானது.

இந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் நாம் கரிசனை கொண்டுள்ளோம். அதேவேளை, இலங்கையில் இணைந்த வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சி ஆகியன இந்தியாவுக்கு எந்தளவுக்கு நன்மையானதும் இன்றியமையாததுமானது உண்மையின் அடிப்படையிலானதே இந்தியா தொடர்பிலான எனது கூற்றுக்கள்’ என்று நடராஜன் முன்னிலையில் முதலமைச்சர் விளக்கிக் கூறினார்.

இந்தியா தொடர்பிலான விக்னேஸ்வரனின் இந்த பிந்திய கருத்துக்கள் தொடர்பில், அந்தக் கருத்துக்களின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புகள் தொடர்பில் இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் அல்லது இந்திய ஊடகங்களிடமிருந்து பிரதிபலிப்பு எதுவும் இதுவரை வந்ததாக இல்லை.

இலங்கைத் தமிழர் பிரச்சினை என்று வரும்போது எந்தவொரு விவகாரத்திலும் இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா எந்தவிதமான நெருக்குதலையும் பிரயோகிக்கக்கூடிய நிலையில் இல்லை என்று பரவலாக நம்பப்படுகின்ற சூழ்நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவிற்கு இருப்பதாக தான் நம்புகின்ற ‘கடமை’ பற்றி விக்னேஸ்வரன் பேசியிருக்கிறார்.

1987 ஜூலை இலங்கை – இந்திய சமாதான உடன்படிக்கையைப் பொறுத்தவரையிலும் கூட, கடந்த காலத்துக்குத் திரும்பிச் செல்ல இந்தியா தயாரில்லை என்பதை கடந்த வருட முற்பகுதியில் கொழும்பு வந்திருந்த அப்போதைய வெளியுறவுச் செயலாளர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரிடம் நேரடியாகவே கூறியிருந்தார் என்பதை நினைவுபடுத்துவது இந்த இடத்தில் பொருத்தமானது.

கொழும்பில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தையடுத்து தோன்றியிருக்கக்கூடிய பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்தி தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதிலேயே சகல தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகளை மனதில் கொண்டுதான் இவர் அவ்வாறு கூறினார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், அந்த அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகள் கடந்த மாதத்தைய உள்ளூராட்சித் தேர்தல்களுக்கு பிறகு தோன்றியிருக்கும் புதிய அரசியல் சூழ்நிலைகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்றே தோன்றுகின்றது. இந்தப் பின்னணியில் புதிய அரசியலமைப்பொன்றின் மூலமாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான தமிழ்த் தலைமைத்துவத்தின் நம்பிக்கைகளும் கூட சிதறிப்போகின்றன என்றுதான் கூறவேண்டும். இந்தியாவிடமிருந்து இத்தகைய சூழ்நிலையில் இலங்கை தமிழர்கள் எதிர்பார்க்கக்கூடிய செய்தி என்னவாக இருக்கும்?

NEWS: tamilenews.com

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு