பண்டிகைகள் கொண்டாடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த மத்திய அரசு!
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நாடு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் மிக நீண்டதொரு முழு அடைப்பை சந்தித்து வருகிறது. பெருந்தொற்று பரவலுக்கு மத்தியிலும் பொருளாதார, வாழ்வாதார நடவடிக்கைகளை கவனிக்க வேண்டிய அவசியம் எழுந்ததால், மத்திய அரசு 5 கட்டங்களாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பண்டிகை காலம் தொடங்குகிறது. இந்த மாதம் துர்கா பூஜை, தசரா, விஜயதசமி, அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை, டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை என பண்டிகைகள் அணிவகுத்து நிற்கின்றன.
இந்திய கலாசாரத்தில், பண்பாட்டில் பண்டிகைகளுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. பண்டிகைகள், குடும்ப உறவுகளை, சொந்த பந்தங்களை, நட்புவட்டத்தை இணைப்பதில் பாலமாக திகழ்கின்றன. எனவேதான் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்திலும் பண்டிகைகளை கொண்டாடுவதில் அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர். அதே நேரத்தில் இந்த காலகட்டத்தில் பண்டிகைகளை கொண்டாடுவது என்பது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
எனவே அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம் வரையிலான 3 மாத காலத்தில் வரக்கூடிய பண்டிகைகளை எப்படி கொண்டாடுவது என்பது குறித்த வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* பண்டிகை கொண்டாட்டங்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள மக்கள், தங்கள் வீடுகளுக்குள் மட்டுமே கொண்டாட்டங்களை வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர வெளியே வரக்கூடாது.
* 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், நாள்பட்ட வியாதிகள் உடையவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே தங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
* பண்டிகை காலத்தில் பதிவு செய்யப்பட்ட பக்தி இசையும், பாடல்களும் இசைக்கப்படலாம். ஆனால் பாடகர்கள் அல்லது பாடகர் குழுக்களுக்கு அனுமதி இல்லை.
* தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டி இருப்பதை கருத்தில் கொண்டு, கொண்டாட்ட இடங்கள், பொதுமக்கள் பார்வையிடக்கூடிய அனைத்து இடங்களிலும் போதுமான தரை பரப்பையும், சரியான அடையாளங்களையும் கொண்டிருக்க வேண்டும். தொற்று அறிகுறியற்ற பார்வையாளர்கள், ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
* பார்வையாளர்களும், பணியாளர்களும் முக கவசம், முக ஷீல்டு அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளியை பராமரிக்க வேண்டும். அதற்கான அடையாளங்கள் வரைந்திருக்க வேண்டும்.
* பேரணிகள், ஊர்வலங்கள், சிலை கரைப்பு போன்றவற்றில் மக்கள் பங்கேற்பதில், நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கை வரம்பினை மீறக்கூடாது. தனி மனித இடைவெளி பின்பற்றப்படுவதோடு, முக கவசம் அணிந்திருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
* பேரணிகள், ஊர்வலங்கள், சிலை கரைப்பு போன்றவற்றுக்கான இடங்களை அடையாளம் காண வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில்தான் மக்கள் வரவேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
* நீண்ட தூரங்களுக்கு பேரணி, ஊர்வலம் நடத்துகிறபோது, ஆம்புலன்ஸ் சேவை உடன் இருக்க வேண்டும்.
* கண்காட்சிகள், பூஜை பந்தல்கள், ராம்லீலா போன்ற நிகழ்வுகள் நாள் கணக்கில், வாரக்கணக்கில் நீடிக்கும் நிகழ்வுகள், பந்தல்கள், இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களை கொண்டே நடத்த போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
* பந்தல்கள், உணவு பரிமாறும் கூடங்கள் போன்றவற்றில் இருக்கைகள் தனிமனித இடைவெளியை பின்பற்றி அமைக்க வேண்டும். கடைகள், ஸ்டால் கள், சிற்றுண்டி கூடங்கள் ஆகியவற்றில் எல்லா நேரங்களிலும் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.
* சமூக சமையலறைகள், அன்னதான நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் தனிமனித இடைவெளியை பராமரிக்க வேண்டும்.
* நாடக மற்றும் சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள், மேடை கலைஞர்களுக்கும் பொருந்தும்.
* கொண்டாட்ட நிகழ்விடங்களில் துப்புரவு பணியாளர்கள், வெப்ப பரிசோதனையாளர்களுக்கு ஏற்பாடு செய்வதுடன், தரையில் தனி மனித இடைவெளி அடையாளங்களை வரைந்திருக்க வேண்டும்.
* யாரும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர் என கண்டறியப்பட்டால், அந்த வளாகத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
* தனிமனித இடைவெளியை பின்பற்றுவதையும், முக கவசம் அணிவதையும் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்.
* யாரும் எச்சில் துப்பக்கூடாது.
* அனைத்து கொண்டாட்ட நிகழ்வுகளிலும் சுகாதார அவசர நிலைகளுக்கு செல்வதற்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
* உள்ளூர் நிலைமைக்கு ஏற்பவும், மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ள வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு ஏற்பவும் தகுதிவாய்ந்த உள்ளூர் நிர்வாகம் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதற்குமான 5-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தபோது, வரும் 15-ந் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் இயங்கலாம் எனவும் அறிவித்தது. அதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று வெளியிட்டார்.
அப்போது அவர், “கடந்த 7 மாதங்களாக தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. வருகிற 15-ந் தேதி முதல் அவற்றை திறக்கலாம். மக்களின் பாதுகாப்புக்காக இந்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுகிறோம்” என்று அவர் கூறினார்.
வழிகாட்டும் நெறிமுறைகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும். ஒரு இருக்கை விட்டு அடுத்த இருக்கையில் பார்வையாளர்கள் அமர வேண்டும். காலியாக விடப்படும் இருக்கைகளில், ‘அமரக்கூடாது’ என்று எழுதி வைக்க வேண்டும்.
* பார்வையாளர்கள் இடையிடையே எழுந்து செல்வதை தவிர்க்க வேண்டும். அரங்குக்குள் உணவுப்பொருட் களை வினியோகிப்பது தடை செய்யப்படும். இடைவேளையின்போது, பொது பகுதிகள், லாபிகள், கழிவறைகள் ஆகிய இடங்களில் கூட்டம் சேருவதை தடுக்க வேண்டும்.
* உணவுப்பொருள் விற்கும் இடத்தில் ஆன்லைன் பரிமாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும். பாக்கெட் உணவுப்பொருள் மற்றும் பானங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
* ‘ஆரோக்ய சேது’ செயலி பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.
* தியேட்டருக்குள் போதிய காற்றோட்டம் இருக்க வேண்டும். ஏ.சி.யை 23 டிகிரி செல்சியசுக்கு மேல் வைக்க வேண்டும்.
* பார்வையாளர்கள் காட்சியின் இறுதிவரை முக கவசம் அணிந்திருக்க வேண்டும். திரையரங்குக்கு வெளியே காத்திருக்கும்போது, 6 அடி இடைவெளியை பராமரிக்க வேண்டும்.
* நுழைவாயிலில் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். கொரோனா அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும். நுழைவாயிலில் கைகழுவ கிருமிநாசினி அளிக்க வேண்டும்.
* ஒவ்வொரு காட்சி முடியும்போதும் அரங்குக்கு உள்ளேயும், கழிவறையிலும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். இதற்காக, அடுத்த காட்சி தொடங்குவதற்கு போதிய இடைவெளி அளிக்க வேண்டும்.
* பன்னடுக்கு (மல்டிபிளக்ஸ்) தியேட்டர்களில், ஒவ்வொரு திரையின் இடைவெளி நேரமும், காட்சி முடிவடையும் நேரமும் ஒன்றுக்கொன்று குறுக்கிடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
* திரையரங்கினுள் நுழையும் வழியையும், வெளியேறும் வழியையும் குறியீடுகளால் குறிக்க வேண்டும்.
* பன்னடுக்கு தியேட்டர்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவதை ஊக்குவிக்க வேண்டும். ஒற்றை தியேட்டர்களில் டிக்கெட் கவுண்ட்டர்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.