இந்தியாவிடம் எனக்காக எதனையும் யாசிக்கவில்லை.

ஆசிரியர் - Editor I
இந்தியாவிடம் எனக்காக எதனையும் யாசிக்கவில்லை.

 

நான் இந்தியாவிடம் அடிபணிந்து விட்டதா க பல பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. ஆ னால் எமது மக்களின் நலனுக்காக அன்றி இந்தியாவிடம் எதனையும் யாசிப்பதற்கு எ னக்கு தேவையில்லை. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறி யுள்ளார்.

இந்தியத் துணைத் தூதுவர்  எ.நடராஜனுக் கான பிரிவு உபசார வைபவம் இன்று மா லை வடமாகாண சபை  கேட்போர்கூடத்தி ல் நடைபெற்றது. இதன்போது உரையாற்று கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவா று கூறியுள்ளார்.

கடந்த மாதம் 25ம் திகதி இந்திய துணை தூதர் எ.நட்ராஐனின் பிரிவுபசார நிகழ்வி ல்  யாழ் மக்கள் சார்பாக வாள் ஒன்றை ஞாபகார்த்தப் பரிசிலாக வழங்கியிருந்தமைக்கு வேறுபட்ட விதமாக அர்த்தம் வழங்கப்பட்டுள்ளது. 

கம்பர் உரை எழுதாமையால் தமிழறிஞர்கள் எவ்வாறு தமது திறமைகளைத்தாம் எழுதிய உரைகளின் வாயிலாக வெளிப்படுத்தினார்களோ அதேபோன்று எமது ஊடகவியலாளர்களும் மாசி 25ம் திகதி தொடக்கம் இன்று வரை விதம்விதமான கற்பனை வளத்துடன் அன்று கையளித்த வாளுக்கான குறியீட்டுச் செய்திகளை வெளியிட்டுவருகின்றார்கள். 

அது மட்டுமல்லாது எனது அரசியற் போக்கு இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதாகவும் அதில் அரசியல் ரீதியான உள்ளர்த்தங்கள் இருப்பதாகவும் கூறி வருகின்றார்கள்.உதாரணத்திற்கு வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதில் இந்தியாவின் முக்கியத்துவம் பற்றியும் இந்தியாவுக்கு இருக்கின்ற தார்மீகக் கடமை பற்றியும் நான் வலியுறுத்தி வருவதை நான் இந்தியாவிடம் அடிபணிந்து விட்டதாக சில பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

நாங்கள் எமது அண்டைநாடான  இந்திய வல்லரசுடன் நெருங்கிய உறவுகளைப்பேணி வருவது யதார்த்த பூர்வமானது. அதற்கு உள்ளர்த்தங்கள் கற்பிக்கப்படுவதுநகைப்பிற்குரியது.எமக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான தொடர்புகள், எமது பிரச்சினையில் கடந்த நான்கு தசாப்தங்களாக இந்தியா ஏற்படுத்தியுள்ள பல்வேறு மட்டங்களிலான தலையீடுகள், 

மற்றும் இன்றைய பூகோள அரசியலில் இந்தியாவுக்கு இருக்கின்ற முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான சுய நிர்ணய உரிமையினை பெற்றுக்கொள்ளும் எமது முயற்சிகளில் இந்தியாவுடனான நட்பு,மேலும் நேர்மையுடனும் இதயசுத்தியுடனுமான பரஸ்பர அரசியல் ராஜதந்திர நடவடிக்கைகள் ஆகியன அவசியமானவை. இதனை இந்திய அடிபணிவு அரசியல் என்று விமர்சனம் செய்வது பொருத்தமற்றது. இந்தியா எமக்கு முக்கியமானது. இந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் நாம் கரிசனை கொண்டுள்ளோம். 

அதேவேளை இலங்கையில் இணைந்த வடக்கு கிழக்கில்   தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை மற்றும் அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான வளர்ச்சி ஆகியன இந்தியாவுக்கு எந்தளவுக்கு நன்மையானதும் இன்றியாமையாததுமானது என்ற உண்மையின் அடிப்படையிலானதே இந்தியா தொடர்பிலான எனது கூற்றுக்கள். 

யுத்தம் காரணமாக பாரிய அழிவினை சந்தித்து தொடர்ந்தும் பல அடக்குமுறைகளுக்குள்ளும் இராணுவ கெடுபிடிகளுக்குள்ளும் வாழ்ந்து வரும் எமது மக்கள் தமது வரலாற்று ரீதியான அடையாளங்களும் உரிமைகளும் பாதுகாக்கப்பட தக்க ஒரு தீர்வினை ஏற்படுத்துவதற்கு இந்தியா காத்திரமானதும் துணிச்சல் மிக்கதுமான ஒரு வகிபாகத்தை மேற்கொள்ளும் என்று எமது மக்கள் நம்பியிருக்கின்றார்கள். 

எமது  மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலை கலாசார ரீதியான உறவுகள் ஒத்துழைப்புக்கள் ஆகியன எமது உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு அடித்தளம் இடுவன என்றும் அவர்கள் நம்புகிறார்கள். கசப்புணர்வுகள், நம்பிக்கையீனங்கள் , சந்தேகப்பார்வை ஆகியவற்றை புறம்தள்ளிவைத்து எமது இலக்கை அடைவதற்காக இந்தியாவுடன் பரஸ்பர நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் இதயசுத்தியுடன் நாம் செயற்பட வேண்டிய  காலம் இது.

அத்துடன் எனது தனிப்பட்ட அரசியற் போக்கு குறித்து இந்தியாவுடன் சம்பந்தப்படுத்தி விமர்சிக்கின்றமை ஹாஸ்யம் நிறைந்தது.

ஒன்றை எம் பத்திரிகையாளர்கள் மனதில் வைத்திருக்க வேண்டும். புலிகளுக்குப் பயந்து இந்திய நாட்டைத் தஞ்சம் அடையவோ இந்திய அரசாங்கத்துடன் சேர்ந்து புலிகளை அழிக்கவோ எனக்குத் தேவையிருக்கவில்லை. 

இந்தியாவுடனான எனது உறவு ஆன்ம ரீதியானது. மகாத்மாகாந்தி 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ந் திகதியன்று சுட்டுக் கொல்லப்பட்டதும் அன்றைய சிறு வயதிலேயே குடும்பத்திலிருந்த மற்றவர்களுடன் சேர்ந்து தேம்பி தேம்பி நாட்கணக்காக அழுது தீர்த்தவர்கள் நாம். ஆச்சார்ய வினோபாபாவே பூதான இயக்கத்தைத் தொடங்கிய போது அது வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தித்தவர்கள் நாங்கள். 

ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் அகிம்சை முறையில் சர்வாதிகாரத்தை எதிர்த்த போது அவரின் மக்கள் இயக்கத்தின் முன்னேற்றம் பற்றிக் கரிசனையாக இருந்தவர்கள் நாங்கள். இன்றைய பத்திரிகையாளர்களுக்கு ஜெயப்பிரகாஷ் நாராயண் பற்றி எதுவுமே தெரியாது இருக்கலாம். அவர் அஹிம்சை முறையில் அரசாங்கத்தை எதிர் கொண்ட விதம் பற்றி எல்லாம் எமது ஊடகவியலாளர்கள் படித்தறிய வேண்டும். அத்துடன் இலங்கை இந்திய சங்கம் மாகாத்மாகாந்தி பற்றிய முதல் நினைவுப் பேருரையை என்னை வைத்தே ஒழுங்கமைத்தனர். 

பாரத நாட்டின் ஆத்ம பலத்தில் ஆன்மீக பாரம்பரியத்தில் ஈடுபாடுடையவன் என்றே என்னைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள் என்று நம்புகின்றேன். அப்போதைய இந்திய ஸ்தானிகர் கௌரவ கோபாலகிருஷ்ண காந்தி எனது பேச்சை வெகுவாக இரசித்தார். அவருடன் இருந்த ஒருவர் காந்தி பற்றி இலங்கைத் தமிழர்களாகிய நீங்கள் அறிந்த அளவு இந்தியர்கள் அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று தெரியவில்லை என்றார். 

எம் மக்கள் நலனுக்காக அன்றி இந்தியாவிடம் எதனையும் யாசிப்பதற்கு எனக்குத் தேவைகள் இல்லை. காங்கேசன்துறை பற்றிய எமது கோரிக்கையை இந்தியா பெருமனதுடன் ஏற்றுள்ளது. அதே போல் பலாலி விமான நிலையம் பற்றிய எமது கோரிக்கைக்கும் இலங்கை அரசாங்கமும் இந்திய அரசும் செவி சாய்க்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றோம்.  எது எப்படியோ நாம் எமது அரசியற் கொள்கைகளில் வழுவாது நின்று எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கக் கூடிய அனைத்து அனுகூலங்களையும் பெற்றுக்கொடுப்பதே எமது சிந்தனையாகும். அதனைப் பத்திரிகைகள் கொச்சைப்படுத்தாது இருக்க வேண்டும் என்று அவற்றிடம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அரசியற் கட்சிகள் பலவும் அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கான முத்தாய்ப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபடத்தொடங்கி விட்டன. இந்த நிலையில் எமது ஒவ்வொரு செயலும் கட்சிகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. எமது நடவடிக்கைகள் சம்பந்தமாக புதிது புதிதாக உரைகள் எழுதப்பட்டு வருகின்றன. தொடர் தேடல்களே விடியல்களுக்கு வழிவகுக்கும் என்ற வகையில் இவர்களின் முயற்சிகள் புதிய புதிய தேடல்களாக மாறி எம்மையும் வழிப்படுத்தட்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு