SuperTopAds

தியாகி திலீபன் போரில் இறந்தாரா..? பொலிஸாரின் சோடனை வழக்கை உடைத்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பொலிஸாருக்கு எதிராக சட்டநடவடிக்கை..

ஆசிரியர் - Editor I

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடாத்த நடவடிக்கை எடுத்ததாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு மாநகர முதல்வர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேர் அடங்கலாக 6 பேருக்கு எதிரான வழக்கிலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

திலீபனை நினைவுகூறும் முகமாக விளக்கு ஏற்றும் நிகழ்வை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், 

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் மற்றும் ஜனநாயப்போராளிகள் கட்சியின் உபதலைவர் நா.சங்கரப்பிள்ளை ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது எதிராளிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணியும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன், 

சிரேஷ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டத்தரணி சுமந்திரனால் பொலிஸார் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீதிமன்றத்தைத் தவறான வழியில் நடத்தமுற்படுவதாக 

கடுமையான குற்றசாட்டுகளை சுமத்தினார். யுத்ததில் திலீபன் இறக்கவில்லையெனவும் பொய்யான வகையிலான குற்றசாட்டுகளை பொலிஸார் முன்வைத்துள்ளனர் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி ஆகிய பொலிஸ் நிலையங்களை இணைத்து 

தொடரப்பட்டிருந்த இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதி வழக்கில் இருந்து அவர்களை விடுவித்தார். பொய்யான குற்றசாட்டுகளை வைத்து வழக்குகளை தயார் செய்யும் பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக இதன்போது கருத்து தெரிவித்த 

சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாகவும் அவர்களின் நேரத்தை வீண்விரயம் செய்துள்ளதாகவும் 

தனது கண்டனத்தையும் நீதிமன்றில் தெரிவித்தார்.