பஞ்சாப்புக்கு எதிரான பரபரப்பான ஆட்டம்!! -சூப்பர் ஓவரில் டெல்லி திறில் வெற்றி-

ஆசிரியர் - Editor II
பஞ்சாப்புக்கு எதிரான பரபரப்பான ஆட்டம்!! -சூப்பர் ஓவரில் டெல்லி திறில் வெற்றி-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்புக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி சூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்றது.

துபாயில் நேற்றிரவு அரங்கேறிய 2 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது. பஞ்சாப் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இடம் பெறவில்லை. நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணித்தலைவர் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணிக்கு பேரிடி விழுந்தது. தொடக்க வீரர் தவான் எந்த ஓட்டமும் பெறாமல் ரன்-அவுட் ஆனார். பிரித்வி சா (5 ஓட்டம்), ஹெட்மயர் (7 ஓட்டம்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி காலி செய்தார். இதனால் தகிடுதத்தம் போட்ட டெல்லி அணி ‘பவர்-பிளே’யான முதல் 6 பந்து பரிமாற்றத்தில் 3 விக்கெட்டுக்கு 23 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இதன் பின்னர் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும், விக்கெட் கீப்பர் ரிசாப் பண்டும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். ஆனால் முக்கியமான கட்டத்தில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 

ஸ்கோர் 86 ஓட்டங்களை எட்டிய போது ரிசாப் பண்ட் 31 ஓட்டத்திலும், ஸ்ரேயாஸ் அய்யர் 39 ஓட்டங்களிலும் (32 பந்து, 3 சிக்சர்) வெளியேறினர். இதனால் மறுபடியும் டெல்லி அணி தடுமாற்றத்திற்கு உள்ளானது. ரன்ரேட்டும் 6 க்கும் குறைந்தது.

விக்கெட் வீழ்ச்சிக்கு மத்தியில் தாக்குப்பிடித்து ஆடிய மார்கஸ் ஸ்டோனிஸ் டெல்லி அணியை நிமிர வைத்தார். எதிர்பார்ப்பையும் மிஞ்சி கடைசி 3 பந்து பரிமாற்றத்தில் பஞ்சாப் பந்து வீச்சை பஞ்சராக்கினார். 

குறிப்பாக கிறிஸ் ஜோர்டான் வீசிய 20 ஆவது ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரி தெறிக்க விட்டார். அந்த ஓவரில் வைடு, நோபால் உள்பட மொத்தம் 30 ஓட்டங்கள் கிடைத்தது.

வாணவேடிக்கை காட்டி சவாலான ஸ்கோருக்கு வழிவகுத்த ஸ்டோனிஸ் 53 ஓட்டங்களில் (21 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுக்கு 157 ஓட்டங்கள் சேர்த்தது. கடைசி 3 பந்துபரிமாற்றத்தில் மட்டும் 57 ஓட்டங்கள் எடுத்தனர். 

பஞ்சாப் தரப்பில் முகமது சமி 4 பந்துபரிமாற்றகளில் 15 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். ஐ.பி.எல். இல் அவரது சிறந்த பந்துவீச்சு இதுவாகும். காட்ரெல் 2 விக்கெட்டும், ரவி பிச்னோய் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து 158 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியும் தொடக்கத்தில் திணறியது. அணித்தலைவர் லோகேஸ் ராகுல் (21 ஓட்டங்கள்), கருண் நாயர் (1 ஓட்டம்;), நிகோலஸ் பூரன் (0), மேக்ஸ்வெல் (1 ஓட்டம்;), சர்ப்ராஸ் கான் (15 ஓட்டம்) ஆகியோரின் விக்கெட்டுகளை விரைவில் பறிகொடுத்தது. 

ஒரு கட்டத்தில் 55 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த பஞ்சாப் அணியை மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் காப்பாற்றினார். தனி வீரராக போராடிய அவர் வெற்றி நெருங்கிய சமயத்தில் கோட்டை விட்டார்.

கடைசி பந்துபரிமாற்றத்தில் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஸ்டோனிஸ் வீசிய இந்த பந்துபரிமாற்றத்தில் முதல் 4 பந்தில் பவுண்டரி, சிக்சருடன் 12 ஓட்டத்தை எடுத்த மயங்க் அகர்வால் (89 ஓட்டம், 60 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), புல்டாசாக வந்த 5 ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்ட முயற்சித்து கேட்ச் ஆனார். கடைசி பந்தில் ஒரு ஓட்டம் தேவைப்பட்ட போது கிறிஸ் ஜோர்டானும் (5 ஓட்டம்) கேட்ச் ஆனார். பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 157 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் சமன் ஆனது.

இதையடுத்து வெற்றி-தோல்வியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 2 விக்கெட்டையும் இழந்து 2 ஓட்டம் மட்டுமே எடுத்தது. 3 ஓட்டம் என்ற இலக்கை 2 ஆவது பந்திலேயே எடுத்து டெல்லி அணி திரில் வெற்றியை பெற்றது.

Radio