SuperTopAds

கிழக்கு கடலில் பற்றியெரியும் MT New Diamond என்ற எண்ணெய்க் கப்பல்!

ஆசிரியர் - Admin
கிழக்கு கடலில் பற்றியெரியும் MT New Diamond என்ற எண்ணெய்க் கப்பல்!

அம்பாறை - சங்கமான்கந்தவுக்கு அப்பாலுள்ள கடலில் எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. குவைத்தில் இருந்து, இந்தியாவுக்கு எண்ணெய் எற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த பனாமா நாட்டுக் கப்பலிலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

MT New Diamond என்ற பெயருடைய இந்த எண்ணெய் தாங்கி கப்பலின் இயந்திர அறையிலேயே முதலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கப்பலில் இருந்த 23 மாலுமிகளில், கப்டன் மற்றும் அதிகாரிகள் இருவர் தவிர ஏனையோர், மற்றொரு கப்பலின் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கடற்படையின் இரண்டு கப்பல்கள் திருகோணமலையில் இருந்தும், ஒரு கப்பல் அம்பாந்தோட்டையில் இருந்தும் உதவிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

விமானப்படையின் எம்.ஐ.17 ஹெலிகொப்டர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் மெட்றிக் தொன் மசகு எண்ணெய் ஏற்றப்பட்டுள்ள இந்தக் கப்பலில் ஏற்பட்டுள்ள தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படாவிடின், கப்பலில் உள்ள எண்ணெய் கசியும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலில், இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் மெட்றிக் தொன் மசகு எண்ணெயுடன், 1700 தொன் டீசலும் இருப்பதாக கூறப்படுகிறது.

கிழக்கு கடல்பகுதியில் எரிந்து கொண்டிருக்கும் பனாமா நாட்டு எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்டுள்ள தீணை அணைக்கும் பணியில் ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் இரண்டும், இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல்கள் மூன்றும் விரைந்து கொண்டிருப்பதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

Thanks photo: airforce media.