அரசியல்கைதிகளை விடுவிக்கக் கோரி யாழ். நகரில் திடீர் போராட்டம்!
சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று மாலை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக திடீர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் சிறைகளில் தடுத்து வைத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய்","வன ஜீவராசிகள் திணைக்கள ஆக்கிரமிப்பை எதிர்ப்பது பயங்கரவாதமா?","கஞ்சா கடத்தலை தடுக்க முற்பட்ட உதயசிவம் பயங்கரவாதியா?" “பயங்கரவாதத்தைத் தடை செய் ஸ்ரீலங்கா” “அரசுக்கு அழுத்தம் கொடு” போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னையின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.