தமிழ் சமூகத்தின் மத்தியில் பெண் ஆளுமையாக எழுந்து நிற்கும் பவதாரணி ராஐசிங்கம்..! ஒரு பார்வை..
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ பவதாரணி ராஐசிங்கம் என்கிற பெண் ஆளுமை தமிழ் சமூகத்தின் மத்தில் அடையாளப்பட்டிருக்கின்றது.
தேர்தல் காலங்களில் பிரச்சாரங்களுக்காக அவர் கையாண்ட யுக்திகளாக இருக்கட்டும் ஊடக செவ்விகளாக இருக்கட்டும் எல்லாவற்றிலும்
அவரிடம் இறந்தகாலம் குறித்த தெளிவும் நிகழ்காலம் குறித்த புரிதலும் இருந்தது எல்லா பதில்களிலும் தெரிந்தது. மிகக் காத்திரமான கருத்துக்களும் பதில்களும்.
ஒரு நேர்காணலில் நெறியாளர் சொல்வார் “ஒரு பெண்ணாக துணிந்து அரசியலில் இறங்கியிருக்கிறீர்கள் எப்படி இந்த துணிவு வந்ததென்று “
உடனே அதற்கு தாரணி ராஜசிங்கம் இப்படிக்கேட்டார் ஏன் பெண்ணாக துணிந்து இறங்க வேண்டும் பெண்கள் விரும்பியே அரசியலுக்கு வந்ததாக யிருக்கலாமே என்று,
இது இந்த நேர்காணலில் மட்டுமல்ல பல வெற்றிப் பெண்கள் குறித்த நேர்காணலில் எல்லாம் அந்தப் “பெண்ணாக “என்கிற வார்த்தை அழுத்திச் சொல்லப்படுவதுண்டு.
வெற்றிகரமான பாதை ஆண்கள் பெண்கள் இருபாலாருக்கும் சவாலானதுதான் என்ன பெண்களுக்கு அதில் இரட்டிப்புச் சவால்கள் இருக்கிறது.
ஆனாலும் அதை வெல்லும் ஆன்மபலமுள்ள பெண்கள் நிச்சயம் அதை வெல்வார்கள். ஆக அங்கே பெண்ணாகத் துணிந்து என்கிற வார்த்தைக்கு
அழுத்தம் தேவையில்லை என்றே தோன்றியது. அந்த பதில் தொடர்ந்து வந்த அவருடைய ஊடக செவ்விகளை பார்க்க வைத்தது.
அரசியல் பிரச்சாரம் என்று வருகிறபோது சில சரக்குப் பொருட்கள் அந்தப் பேச்சுக்களில் இருக்க வேண்டும் என்று இதுவரை சில அரசியல் பேச்சாளர்களால்
கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிறைய ஜோடனைகள் பவதாரிணி ராஜசிங்கத்தினுடைய பேச்சுக்களில் இல்லை. முக்கியமாய் படிப்பது தேவாராம்
இடிப்பது சிவன் கோவிலாய் தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ்த்தேசியத்தை ஒரு தோளிலும் மண்ணுக்காய் இன்னுயிர் கொடுத்தவர்களை இன்னொரு தோளிலும் சுமந்து வருகிறவர்கள்,
சிங்களவனை வரவிடப்போகிறீர்களா என்று உச்ச ஸ்தாயியில் நாவறள பேசுகிறவர்கள்,
அவன் அதைச் செய்தான் இவன் இதைச் செய்தான் என்று தான் நல்லவனாக அடுத்தவனை குற்றவாளியாய் காட்டிக் கொடுக்கிறவர்,
வயிற்றுச் சோறுக்கு வழி கேட்டு நிற்பவருக்கு வா தனி நாடு வாங்கலாம் என்று அழைப்பவர்கள் இப்படி யாரினுடைய சாயலையும் அந்தப் பேச்சில் பார்க்கவில்லை.
சில தேர்தல் பிரச்சாரங்களை பார்க்கிற பொழுது அப்பட்டமாய்த் தெரியும் சொல்வதெல்லாம் அண்டப் புழுகென்று. இப்படி பட்ட காயத்தின் வலிகளை வார்த்தை ஜாலங்களால் கிண்டிக் கிண்டி
கொஞ்சமும் குற்ற உணர்ச்சியில்லாமல் அந்த காயங்களுக்கு மருந்திடத் திராணியில்லாதவர்கள் வாக்காக மாற்றிக் கொண்டிருக்கிறார்களே என்கிற போது இன்னும் இந்தத் தந்திரக்காரர்கள் கையில் பகடைகளாய் உருளும் நம் சனத்திற்காய் துக்கிக்க தோன்றும்.
இதுவரைக்கும் யார் யாரையோ எதை எதையோ தேர்தல் பிரச்சாரங்களுக்கான கருவிகளாக எல்லாரும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
நானறிய கலையை ஒரு மாற்றத்திற்கான உத்தியாய் கலைஞர்களை அதற்கான சக்தியாய் பயன்படுத்தி அரசியல் முன்னெடுப்புகளில் ஒரு மாற்றுப்பாதையை முன்மாதிரியை காண்பித்தது பவதாரிணி ராஜசிங்கம் தான்.
பவதாரிணி ராஜசிங்கம் இம்முறை தேர்தலில் நிற்கிறார் என்கிற செய்தியே உள்ளூர அவ்வளவு நம்பிக்கையை கொடுத்தது .தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் சரியானமுறையில் கவனித்துக்கொள்ளும் ஒருத்திக்கு தான் சார்ந்த சமூகத்தின் நலனைக் கவனித்துக் கொள்வதொன்றும் கடினமாயிருக்காது.
அவரால் காணாமல் போனவர்களை கையில் கொண்டு வந்து கொடுக்க முடியாதுதான் நாளைக்கே தீர்வை வாங்கிக் கொடுக்கமுடியாதுதான் ஆனால் இந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை புரிந்து கொண்டு அதைச் சின்ன சின்ன மட்டங்களிலேனும் பூர்த்தி செய்ய முடியும். நியாயம் செய்ய முடியாது போனாலும் அநியாயம் நிகழாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது.
நான் எனது நிகழ்ச்சிகளில் போராட்டம் பற்றின விடயங்களை பேசுகிற போதெல்லாம் திருகோணமலைக்காரர் இவங்களெல்லாம் போராட்டம் பற்றிப் பேசுகிறார்கள் என்று காதுப்படச் சொல்லியிருக்கிறார்கள்.
நான் பதிலுக்கு கேட்டேன் நான் பேசக்கூடாதென்றால் யார், போராட்டம் பற்றிப் பேசுவதற்கு தகுதியானவர்கள் என்று
திருகோணமலையான் பேசக் கூடாது கொழும்பான் பேசக் கூடாது வயதில் சின்னவர்கள் பேசக்கூடாதென்று சொல்லும் நீங்களே தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக எல்லோரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்கிறீர்கள்.
நம்முடைய அடுத்ததலைமுறைக்கு நமக்கு இழைத்திருக்கும் அநீதி குறித்து சொல்லிக் கொடுக்க சொல்கிறீர்கள். பின்னர் அது குறித்து பேச வருகிறவர்களை இவர்களெல்லாம் போராட்டம் பற்றி பேச வந்து விட்டார்கள் என்பீர்கள்.
இன உணர்வு உருவாகவும் தேசத்திற்காய்ப் பேசவும் களத்தில் நின்று வீரச் சாவடைந்தவர்களுக்கு மட்டும் தான் தகுதியுள்ளதென்றால் இங்கே இப்போது பேச யாரும் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள்.
மக்கள் சேவை மனத்தினுடைய வாஞ்சையில் இருந்து தான் தொடங்குகிறது .பவதாரிணி ராஜசிங்கத்திடம் அந்த வாஞ்சை நிறையவே இருந்ததை .இந்த தேர்தல் காலங்களில் அதிகம் பேர் கண்டிருப்பார்கள்.
அவளுக்கும் ஒரு வாக்கு என்று பெண்களுக்கு வாக்களிக்கும் படி கேட்டிருந்தார்கள். பெண் என்பதால் எல்லாம் இங்கே யாரும் யாருக்கும் வாக்களிக்க வேண்டியதில்லை.
உங்கள் ஒரு வாக்குக்கு யார் தகுதியோ அவருக்கு வாக்களித்தால் போதும். பெண்ணுரிமை பெண் செயற்பாட்டாளர் பெண்கள் முன்னேற்றம் என்றெல்லாம் சொல்லிப் பேசிக்கொண்டு ஒரு பிரபல விருதுவிழாவில்
சக வெற்றிப் பெண்ணின் கையிலிருந்து விருதை வாங்க மறுத்து விருதை அமைச்சரின் கையில் கொடு என்று மேடையில் நின்று முறைத்து அந்த வெற்றிப் பெண்ணை மேடையில் இருந்தே இறங்க வைத்தவர் கூட இந்த தேர்தலில் பெண் வேட்பாளராக நின்றிருக்கிறார் .அதற்காக அவளுக்கும் ஒரு வாக்கு என்று அந்த வேட்பாளருக்கும் வாக்களிக்கச் சொல்ல முடியுமா.
இந்த எந்த வாக்குத் திரட்டும் அனுதாப வார்த்தைகளும் இல்லாமல் இந்த தேர்தல் காலத்தில் நான் பார்த்த பெண் ஆளுமை பவதாரிணி ராஜசிங்கம் தான்.
இந்த தேர்தலில் அவருக்கு அரசியல் ஆசனம் கிடைக்கா விட்டாலும் மக்களின் மனங்களில் அவருக்கொரு சிம்மாசனம் கிடைத்திருக்கிறது .
மக்கள் மனங்களை பிடித்துக் கொள்வதுதான் முதல் வெற்றி.
அப்படியானால் பவதாரிணி ராஜசிங்கம் வெற்றியாளரே.
அரசியலும் மக்கள் சேவையும் தேர்தல் காலங்களுக்கானது மட்டுமல்ல.
அது தொடர்ந்தேச்சையாக நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
இப்போதும் தேர்தல் முடிந்தபிறகும் நீங்கள் மக்களுக்குச் செய்வதாய்ச் சொன்ன வாக்குறுதிகளை தனிப்பட நீங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கும் காட்சிகளை பார்க்க முடிந்தது.
மிக்க மகிழ்ச்சி பவதாரிணி ராஜசிங்கம்
விரும்பி இறங்கின நீங்கள் நிறுத்தாமல் பயணிக்க வேண்டும் என்பதே உங்களை விரும்புகிறவர்களின் அன்பின் வேண்டுகோள்.
நன்றி: ஊடகவியலாளர் ப்ரியா வின்சன்ட்