வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆறு அமைப்புகள் முன்னணிக்கு ஆதரவு!

ஆசிரியர் - Admin
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆறு அமைப்புகள் முன்னணிக்கு ஆதரவு!

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு பூரண ஆதரவினை வழங்குவதாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த  ஆறு பொது அமைப்புகள் கூட்டாக தெரிவித்துள்ளன.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த அமைப்புகளின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கிராமிய உழைப்பாளர் சங்கம், மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், மாவட்ட பூந்தளிர் பெண்கள் அமைப்பு, மாற்றத்திற்கான மாவட்ட இளைஞர் பேரவை மற்றும் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு அகிய அமைப்புக்களே இவ்வாறு ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தாம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பதாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார், செயலாளர் தி.நவராஜ் மற்றும் ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா இணைந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான தாமரை மொட்டுக் கட்சியே மத்தியில் (கொழும்பில்) ஆட்சி அமைக்கப் போகின்றது. எனவே தாங்கள் கையாளக்கூடிய, தமது அரசியல் தீர்மானங்களுக்கு ஒத்து இசைந்து போகக்கூடிய, ஒரு தரப்பே வடக்கு கிழக்கில் இம்முறை தேர்தலில் அதிக ஆசனங்களுடன் வெல்ல வேண்டும் என்று ராஜபக்ச குடும்பத்தினர் விரும்புகின்றனர்.

புலிகள் கேட்டதை விடவும் அதிகமான அதிகாரங்களை கூட்டமைப்பு கோருகிறது. என்று ராஜபக்ஸ தரப்பினர் கத்துகின்றனர். இப்படி ராஜபக்ஸ தரப்பினர் வெளியிட்ட அறிக்கைகள் எல்லாம் கூட்டமைப்பினர் எழுதிக் கொடுத்து ராஜபக்ச தரப்பினர் வாசித்த அறிக்கைகளே.

தமிழ் மக்களின் ஆணை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்புக்கு கிடைத்து விடக் கூடாது என்று ராஜபக்ச தரப்பினர் விரும்புகின்றனர். இப்போதும் தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் சத்தமே இல்லாத ஒரு பெரும் இனவழிப்பு போர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை பொ.கஜேந்திரகுமார் தலைமையில் தமிழர் தேசம் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.

தண்ணீருக்கு உள்ளால் விடுதலை நெருப்பை அணைய விடாமல் கொண்டு போய்க் கரை சேர்ப்பித்து அடுத்த தலைமுறைப் பிள்ளைகளிடம் கையளித்து விட்டாலே போதுமானது. இந்த தேசியப் பெரும் பணியை சளைக்காமல், தொய்வுறாமல் செய்து கொண்டிருக்கும் கஜேந்திரகுமாரின் கரங்களை தமிழ் மக்கள் பலப்படுத்த வேண்டும்.” என்றுள்ளது.

Radio