இராணுவ அதிகாரியை தெரிவு செய்தால் எமது இருப்பு கேள்விகுறியாகும்!

ஆசிரியர் - Admin
இராணுவ அதிகாரியை தெரிவு செய்தால் எமது இருப்பு கேள்விகுறியாகும்!

இராணுவ அதிகாரியொருவரை தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளால் நாடாளுமன்ற உறுப்பினராக்கினால் எமது இருப்பு கேள்விகுறியாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஈச்சங்குளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “யுத்தம் முடிந்ததன் பின்னர் தலைமைத்துவம் இல்லாத இனமாக நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எங்களுடைய பலம், எங்களுடைய இருப்பு, எங்களுடைய அடையாளம், மொழி, கலாசாரம் எல்லாவற்றையும் இணைத்து பயணிக்கவேண்டிய தேவை உள்ளது.

நாங்கள் எங்களுடைய ஒற்றுமையை நிலைநிறுத்தாவிட்டால் எங்களுடைய இனம் பெரியதொரு கேள்விக்கு உட்படுத்தப்படுவதுடன் சவாலுக்கும் உட்படுத்துப்படும். இதனூடாக எங்களுடைய தனித்துவம் அழிக்கப்படும்.

இதற்கான முயற்சிகள் பல ஆண்டு காலமாக எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் தற்போது வன்னியில் கோட்டாபய அரசாங்கம் இதற்காக பெரும் முயற்சியை எடுக்கின்றது. இந்த பகுதியில் ஒரு இராணுவ அதிகாரியை அல்லது சிங்களவர் ஒருவரை வன்னி மக்களால் தெரிவு செய்வதற்காக முயற்சிக்கின்றது.

ஏனெனில், 2019ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு எங்கடைய பிரதேசத்தில் இருக்கின்ற இராணுவத்தினருக்கு வித்தியாசமான தைரியம் கிடைத்துள்ளது. இராணுவத்தினர் முன்பிருந்ததைப் போல் அல்ல. எங்களுடைய மக்களை வஞ்சிக்கின்ற, அடக்கி ஆள நினைக்கின்ற முழுமையான செயற்பாட்டிற்கு இராணுவம் வந்துள்ளது.

இன்று பல துறைகளிலும் இராணுவத்தினருக்கு பதவிகள் வழங்கப்பட்டுவரும் நிலையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இராணுவ வீரர்களை கொண்டுவருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த நோக்கத்திலேயே வன்னியிலும் இராணுவ அதிகாரியொருவர் தமிழ் மக்களின் வாக்குகளுக்காக களம் இறக்கப்பட்டுள்ளார்.

அந்த இராணுவ அதிகாரி வன்னியில் வெற்றி பெற்றால் எங்கள் இனத்தின் இருப்பு என்னவாகும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். எங்களுடைய பிரதேசத்தில் இராணுவத்துடன் சம்பந்தமில்லாத பல விடயங்களுக்கு இராணுவம் சம்பந்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

எமது மக்கள் விவசாயம் செய்த காணிகளில் தற்போது விவசாயம் செய்யவிடாமல் இராணுவம் தடுத்து வருகின்றது. இராணுவம் எந்த நிர்வாகத்தில் ஈடுபடுவது என்ற நிலை இல்லாமல் போய்விட்டது.

எங்களுக்குள்ள ஆபத்து தெரியாமல் நாங்கள் பிரிந்து நின்றால் எமக்கு பெரும் ஆபத்து வந்து சேரும். எனவே நாங்கள் ஒரே அணியாக இருக்க வேண்டும். எனவே, நாம் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்காவிட்டால் அது சிங்கள அல்லது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரையே கொண்டுவர வழிவகுக்கும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் மக்கள் நலன் சார்ந்து பிரியவில்லை. அவர்களது செயற்பாடு சுயநலம் சார்ந்த செயற்பாடாகவே இருக்கின்றது” என்று குறிப்பிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு