SuperTopAds

சொல் அல்ல செயல் - முத்தையா பிரபு

ஆசிரியர் - Admin
சொல் அல்ல செயல் - முத்தையா பிரபு

(க.கிஷாந்தன்)

மலையகத்தில் மாற்றம் ஏற்படவேண்டும். அதற்காகவே நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய ஆட்சியின் கீழ் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்துவோம் - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்தார்.

லிந்துலை பெயார்வெல் தோட்டத்தில் 20.07.2020 அன்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அவரின் அபிவிருத்தி செயல்திட்டங்களை எமது பகுதிகயிலும் நடைமுறைப்படுத்தவேண்டும். அபிவிருத்தி என்பது வார்த்தையில் மட்டுமல்ல செயலிலும் இருக்கவேண்டும் என்பதற்காகவே நான் அரசியலில் குதித்துள்ளேன்.

தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு பலரும் ஏமாற்றுவார்கள். ஆனால், செய்துகாட்டுவதற்காகவே நாம் அரசியலுக்கு வந்துள்ளோம்.

வருமானம் இன்மையே எமது மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாகும். அந்த வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கான வழிமுறைகள் இங்கு இல்லை. அதற்கான திட்டங்களையும் அரசியல்வாதிகள் கொண்டுவரவில்லை. நுவரெலியா மாவட்டத்தில் தொழிற்சாலைகள் இருந்தால் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லவேண்டியதில்லை. அவ்வாறான தொழிற்சாலைகளை கொண்டுவருவதற்கும் கடந்தகாலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறான திட்டங்களையே நாம் கொண்டுவரவுள்ளோம்.

தொழிற்சாலைகளை உருவாக்கினால் உதிரி தொழில்களும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வீட்டின் அபிவிருத்தி கூடினால் மட்டுமே அபிவிருத்தி என்பது அர்த்தமுடையதாக இருக்கும்.  சுதந்திரகம் கிடைத்து 72 வருடங்கள் கடந்தும் தமிழ் அரசியல் வாதிகளால் நுவரெலியாவில் ஒரு தமிழ் தேசிய பாடசாலையை உருவாக்கமுடியாத நிலை ஏற்பட்டது.

இவ்வாறான அரசியல் மாறவேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே நான் வந்துள்ளேன். எனக்கும் வாய்ப்பு தந்து பாருங்கள், நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்." - என்றார்.