யாழ்.வடமராட்சி கிழக்கில் நடக்கும் அட்டூழியம்..! தென்னிலங்கை மீனவர்களை பாதுகாக்க அரசியல் கட்சி ஒன்றின் எடுபிடி அட்டகாசம், கடற்றொழில் அமைச்சரே நித்திரையா..?

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் நடக்கும் அட்டூழியம்..! தென்னிலங்கை மீனவர்களை பாதுகாக்க அரசியல் கட்சி ஒன்றின் எடுபிடி அட்டகாசம், கடற்றொழில் அமைச்சரே நித்திரையா..?

யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் எந்தவொரு அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக கடற்றொழில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்து சட்டநடவடிக்கை எடுக்க முயற்சித்த கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளை அரசியல்வாதி ஒருவர் தடுத்து நிறுத்தியதுடன், 

அவருடைய கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், முறைப்பாடு செய்ய சென்றிருந்த சமயம் அதிகாரிகளை குற்றவாளிகள்போல் பொலிஸார் விசாரித்துள்ளதுடன், தாக்கவும் முயன்றதாக அதிகாரிகள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. 

இது தொடர்பாக மேலும் தொியவருவதாவது, தென்னிலங்கையில் இருந்து வந்து வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இரகசியமான முறையில் எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் தொழிலில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்கள் சுருக்குவலை, டைனமற் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதாக 

கடற்றொழில் திணைக்களத்திற்கு முறையிடப்பட்ட நிலையில் 18ம் திகதி மாலையில் விசேட அதிரடிப்படையினரின் துணையுடன் மாவட்ட கடற்றொழில் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்ட சமயம் 5 படகுகளில் டைனமற் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 

சான்றுடன் காணப்பட்ட 3 ஆயிரம் கிலோவிற்கும் மேற்பட்ட மீன்களை கைப்பற்றிய திணைக்கள அதிகாரிகள் அவற்றை வைத்திருந்த கடற்றொழிலாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதற்கான வாகன ஏற்பாடுகளை மேற்கொண்டு காத்திருந்த சமயம் 

தென்னிலங்கை அரசியல் கட்சி ஒன்றின் வடக்கு மாகாண இணைப்பாளர் என அறிமுகம் செய்த ஒருவர் மேலும் சிலருடன் இணைந்து அதிகாரிகளை கடமையை செய்ய விடாது தடுத்ததோடு சந்தேக நபர்களை சான்று பொருட்களுடன் தப்பிச் செல்ல வழி ஏற்படுத்தியுள்ளார்.

இதன்போது தடுக்க முற்பட்ட அதிகாரிகளை தாக்க முற்பட்டதனால் அதிகாரிகள் அங்கிருந்து அகன்று சென்ற நிலையில் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற சமயம் நேற்றைய தினம் காலை 10 மணிக்கு வருமாறு கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். 

இதயைடுத்து அதிகாரிகள் நேற்றுக் காலை 10 மணிக்கு பளை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு பதியச் சென்றபோது சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு அரசியல் கட்சி ஒன்றின் எடுபிடியால் தப்பிச் சென்றவர்கள் சகிதம் தென்னிலங்கையைச் சேர்ந்த 30 தொழிலாளர்கள் பொலிஸ் நிலையத்துல் நின்றுள்ளனர். 

இதன்போது அதிகாரிகளிடம் முறைப்பாட்டினை பெற்று விசாரணையை மேற்கொள்ள வேண்டிய பொலிஸார் அதிகாரிகளிடம் முறைப்பாட்டினையே பெறாமல் அதிகாரிகளே குற்றவாளிகள் என விசாரணை நடாத்தியதோடு பொலிஸ் நிலையத்திலும் தொழிலாளர்கள் அதிகாரிகளை தாக்க முற்பட்ட சமயம் 

எந்த நடவடிக்கையும் எடுக்காது அதிகாரிகளை தூசண வார்த்தைகளால் ஏசி அவமதித்துள்ளனர். இவ்வாறு தொழிலில் ஈடுபடுபவர்களிற்கு எந்தவிதமான அனுமதியும் கிடையாது என அதிகாரிகள் சுட்டிக்காட்டியபோது அவ்வாறானால் அந்த அனுமதியை உடன் வழங்கு என எச்சரித்துள்ளனர்.

இதனால் நிலை குலைந்த அதிகாரிகள் மேல் அதிகாரிகளிற்கு தகவல் வழங்க முற்பட்ட நிலையில் ஒரு மணியளவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர். இதேநேரம் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் பிடிக்கப்பட்ட மீனையே அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அத்தோடு சட்டமுரணாக கைது செய்ய முயன்றமையினாலேயே அங்க தர்க்கம் ஏற்பட்டதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட நீரியல்வளத் திணைக்கள அதிகாரி சுதாகரனைத் தொடர்பு கொண்டு மேற்படி விடயம் தொடர்பில் கேட்டபோது,

பொலிசார் சட்டத்தை நடைமுறைப்படுத்த உறுதுணகயாக இருப்பதற்குப் பதிலாக குற்றவாளிகளிற்கும் குற்றவாளிகளை தப்பிக்க வைத்தவரிற்கும் உதவுமாறு கோரும் நிலையில் தற்போது மேலதிக விபரங்களை தெரிவிக்க விரும்பவில்லை. 

இருப்பினும் குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக எமது அமைச்சிற்கும் அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். இது தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் பேசுவதாக அமைச்சர் அறிவித்துள்ளதனால் சக உத்தியோகத்தர்கள் பொறுமை காத்துள்ளனர் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு