கூரையை பிரித்து வீட்டுக்குள் நுழைந்தவரை பிரித்து மேய்ந்த மக்கள்..! பல குற்றங்களில் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டவராம்..
மட்டக்களப்பு ஏறாவூர்- ஐயங்கேணி கிராமத்தில் வீடொன்றின் கூரையை பிரித்து வீட்டுக்குள் நுழைந்த திருடனை அயலவர்கள் மடக்கி பிடித்து அடித்து நொருக்கியபோதும் திருடன் தப்பி ஓடிய நிலையில் பொலிஸாரின் உதவியுடன் மடக்கப்பிடிக்கப்பட்டுள்ளான்.
கைது செய்யப்பட்ட திருடன் ஏறாவூர் தாய் மகள் இரட்டைப் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஏறாவூர், ஐயங்கேணி றியாஸ் பேக்கரி வீதியில் குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்த இளம் தாய் ஒருவரின் வீட்டின் ஓடுகள் கடந்த வெள்ளிக்கிழமை (17) அதிகாலை 01.15 மணியளவில் கழற்றப்பட்டுள்ளன.
அந்நேரம் திடீரென கண்விழித்த அவ்வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளம் தாய் உள்ளிறங்கிய நபரின் நிழலைக்கண்டு கள்வன், கள்வன் என கூச்சலிட்டவாறு வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு வீதிக்கு வந்துள்ளார்.
வீட்டினுள்ளே நுழைந்த ஆசாமி விபரீதத்தை உணர்ந்து அடுக்களைப் பக்கத்துக் கதவைத் திறந்து வீட்டின் பின்னால் வெளியேறி மதிலால் அயல் வீட்டுக்குள் பாய்ந்து செல்வதை அவ்வீட்டுப் பெண் அவதானித்திருக்கிறார்.இவ்வேளையில் சத்தம் கேட்டு
அயல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மின் விளக்கை ஒளிரச் செய்தபோது, அங்கிருந்த பழைய பெட்டியொன்றின் பின்னால் குறித்த நபர் ஒழிந்திருப்பதைக் கண்டுள்ளனர்.பச்சை ரீ சேர்ட் அணிந்தவன் ஒழிந்திருக்கின்றான் என்று சத்தமிட,
சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தான் அணிந்திருந்த ரீ சேர்ட்டை கழற்றி பக்கத்து வீட்டுப்பக்கம் வீசி விட்டு தப்பிச் செல்ல முயன்றிருக்கின்றான். அவ்வேளை அந்த நபரைத் தப்ப விடாது துரத்திச்சென்ற இளைஞர்கள் அவனைப் பிடித்துள்ளனர்.
அப்போது அந்நபர் பரபரப்பான ஏறாவூர் தாய் மகள் இரட்டைப் படுகொலையோடு சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் என அடையாளம் கண்டுள்ளனர். அவ்வேளையில் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட நபர் திமிறிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளான்.
இச் சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது விசாரணைகள் தொடர்கின்றன.
மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஏறாவூர் இரட்டைப்படுகொலைச் சம்பவம் கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்றது.ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த
தாயான நூர் முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் 2016 செப்ரெம்பெர் 11 ஆம் திகதி இரவு படுகொலை செய்யப்பட்டிருந்தனர். சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட
6 சந்தேக நபர்களும் தொடர்ச்சியாக ஒருவருடம் நீடிக்கப்பட்டு வந்த விளக்கமறியல் உத்தரவில் இருந்து வந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு விசாரணை தற்போதும் இடம்பெற்று வருகின்றது.
அதேவேளை கொழும்பு 4 ஆம் மாடி குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தொடர்ச்சியான விசாரணைகளும் இடம்பெற்று வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.படுகொலை செய்யப்பட்ட ஜெனீரா பானுவின் கணவர் மாஹிர் இப் படுகொலை விசாரணையை
கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பாரப்டுத்துமாறு தனது சட்டத்தரணியூடாக வேண்டுகோள் விடுத்ததன் பேரில் கடந்த இரண்டு வருடங்களாக கொழும்பு 4 ஆம் மாடி குற்றப்பலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்ட நிலையில்
இரு தடவைகள் சந்தேக நபர்கள் கொழும்புக்கு அழைப்பித்து விசாரிக்கப்பட்டுள்ளனர்.