வடக்கு-கிழக்கு இணைந்த சமஸ்டி கட்டமைப்பிற்குள் அதிகாரப்பகிர்வு! - கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்.
ஒன்றுபட்ட வடக்கு-கிழக்கு அலகைக் கொண்ட சமஸ்டிக் கட்டமைப்பிற்குள்ளே அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக்கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான, தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்விலேயே இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துக்கான முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களான, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்,ஏ.சுமந்திரன், வேதநாயகம் தபேந்திரன், சசிகலா ரவிராஜ், சிறிதரன், சரவணபவன், கஜதீபன், இம்மானுவல் ஆர்னோல்ட், சுரேந்திரன் குருசாமி ஆகியோரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சிவிகே சிவஞானம் மற்றும் ஆதரவாளர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.