SuperTopAds

மாற்று அணிக்கு வாக்களித்தால் தமிழரின் அரசியல் நிலைப்பாடு பலவீனமடையும்! - சுமந்திரன்

ஆசிரியர் - Admin
மாற்று அணிக்கு வாக்களித்தால் தமிழரின் அரசியல் நிலைப்பாடு பலவீனமடையும்! - சுமந்திரன்

மாற்று அணி எனத் தெரிவித்து ஓரிரு ஆசனங்களை இலக்கு வைப்பவர்களுக்கு வாக்குகளை அளித்தால், தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு பலவீனமடைந்து விடும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.     

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இதன்போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“முக்கியமான ஒரு கேள்வியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்ற கேள்வி மக்களிடத்தில் முன்வைக்கப்படுகிறது.

கடந்த ஐந்து வருடங்களில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதிக அபிவிருத்தித் திட்டங்கள், மக்களுக்கான செயற்றிட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு நிறைவேற்றப்பட்ட விடயங்களை மக்கள் அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு அறிக்கைகளாக அடுத்தவாரம் வெளியிடவுள்ளோம். இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இரண்டு முக்கிய விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

முதலாவதாக, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான எமது நிலைப்பாட்டை மீளவும் உறுதியாக தெரிவித்துள்ளளோம். அதனை எவ்வாறு அடைய முற்படுகின்றோம் எனவும் கூறியுள்ளோம்.

அத்துடன், எமது மக்களின் பொருளாதார மேம்பாடு சம்பந்தமாகவும் அதைக் கையாளும் சில விடயங்களையும் முன்மொழிவுகளாக முன்வைத்துள்ளோம்.

தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, 19ஆம் திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும், 13ஆம் திருத்தச் சட்டத்தை மாற்றுவதற்கும் மக்களிடம் ஆணை கேட்கிறது.

இந்த சூழ்நிலையில், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சார்பாக அனுப்பி வைக்கிற பிரதிநிதிகள், ஒரே அமைப்பாக, ஒற்றுமையாக, செல்வது அவசியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

மாற்று அணிகள் என்று, எங்களுக்கும் சந்தர்ப்பம் கொடுங்கள் என்று பலர் கேட்டு வருகிறார்கள். அவர்கள் ஒரு ஆசனம், இரண்டு ஆசனத்தை இலக்கு வைத்து தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள்.

அவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை மக்கள் கொடுக்கின்ற போது, அது தமிழ் மக்களுடைய அரசியல் நிலைப்பாட்டை வெகுவாகப் பாதிக்கும், என்பதுடன் பலவீனப்படுத்தும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான் இன்று மக்களுடைய அபிலாசைகளை முன்னிறுத்தி பலமான அணியான 20 ஆசனங்களைக் கைப்பற்றக் கூடிய அணியாக இருக்கிறது.

இதனை கருத்திற்கொண்டு தங்களுடைய பலம் சிதைந்து விடாத வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.