வாட்ஸ்ஆப்பில் ஆபாச பதிவுகளை பகிர்வதில் இலங்கை முன்னிலை
வாட்ஸ்ஆப் ஊடாக சிறுவர் ஆபாச காணொளிகளை அதிகம் பகிரும் நாடாக இலங்கை உருமாறி வருவதாக இந்திய மத்திய விசாரணைகள் பணியகம் தெரிவித்துள்ளது. சிறுவர்களின் ஆபாச காணொளிகளை பதிவேற்றம் செய்யும் குழுவொன்று அண்மையில் இந்தியாவின் டெல்லியில் கைதுசெய்யப்பட்டுள்ளது.
சிறுவர் ஆபாச காணொளிகளை வாட்ஸ்ஆப் குரூப்கள் ஊடாக பகிரும் குழுவொன்று டெல்லியை தளமாக கொண்டு 119 நபர்களுடன் இயங்கி வந்துள்ளது. இதில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்யப்பட்ட சிறுவர் ஆபாச காணொளிகள் ஆயிரக்கணக்கில் பதிவிடப்பட்டுள்ளதாக தென்னிந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் உலகளாவிய குற்றமாக இதனை வகுத்துள்ள இந்திய மத்திய புலனாய்வு விசாரணை குழு இந்த வாட்ஸ்ஆப் குழுவின் பங்காளிகளான சீனா, பாகிஸ்தான், பிரேசில், ஆப்கானிஸ்தான், கென்யா, நைஜீரியா, மெக்ஸிகோ, நியூஸிலாந்து, இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளை அடையாளப்படுத்தி, அந்த நாட்டு அரசாங்கங்களுடன் கலந்துரையாடி விசாரணைகள் மற்றும் கைதுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் இந்திய மத்திய புலனாய்வு விசாரணை குழுவினால், இந்த வாட்ஸ்ஆப் குழுவின் நிர்வாகிகள் ஐவரை கைதுசெய்துள்ளது. இதன்படி கூடிய விரைவில் இதுபோன்ற காணொளிகளை இலங்கையிலிருந்து தரவேற்றம் செய்யும் மற்றும் பகிரும் சந்தேகநபர்களை இலங்கை அரசின் உதவியுடன் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சி.பி.ஐ. விடுத்துள்ள விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.