SuperTopAds

போராளிகளை உள்ளீர்க்கும் பொறிமுறை- ரெலோ முன்னெடுப்பு!

ஆசிரியர் - Admin
போராளிகளை உள்ளீர்க்கும் பொறிமுறை- ரெலோ முன்னெடுப்பு!

தேசத்துக்காகவும் மக்களுக்காகவும் விடுதலைப் போராட்டத்தில் அர்ப்பணித்த போராளிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஓர் அங்கமாக ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொள்ளுகின்ற ஒரு முறைமையை மேற்கொள்ளுவதற்காக, ரெலோ முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக, அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில், இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தங்களுடைய இனத்தின் சார்பாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேறு திசையில் செல்லாமல் இருப்பதற்கும் ஆயுதம் ஏந்திய போராளிகள் ஜனநாயக நீரோட்டத்திற்கு வர வேண்டும் என்பது தான் பிரதான நோக்கமாக இருக்கிறதென்றார்.

“அந்த வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இந்தப் போராளிக் கட்சிகள் பலம் சேர்க்க வேண்டும். அதன் ஓர் அங்கமாகவும் பங்குதாரர்களாகவும் வர வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம்.

“அந்த வகையில் விடுதலைப் புலிகளின் போராளிகள் 3 அல்லது 4 அமைப்புகளாக இருக்கிறார்கள். தேசியத்தோடு இன உணர்வோடு இருக்கின்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்புகளைத் தனித்துவத்தோடு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போராட்ட இயக்கங்கள் என்கின்ற அடிப்படையில் நாங்கள் ஒற்றுமையான ஒரு நிர்வாக கட்டமைப்புடன் கொண்ட அமைப்பாக செயற்பட வேண்டும் என்ற அடிப்படையில், தாங்கள் அந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்” எனவும், அவர் தெரிவித்தார்.

“அடுத்த வாரம் நாங்கள் எல்லாரும் சேர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்குதாரர்களாக விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட இயக்கங்களை நாங்கள் இணைக்கின்ற ஒரு முயற்சியை மேற்கொள்ளுகின்றோம். அந்த வகையில் தேசியத்தோடு நிற்கின்றவர்கள் குறிப்பாக ஈரோஸ், விடுதலைப் புலிகளை மூன்று அமைப்புகள் தற்போது உள்ளனர்.

“அவர்களையும் சேர்த்து ஏற்கெனவே கூட்டமைப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் புளொட் அமைப்பு ஆகிய இந்த இரண்டு இயக்கங்களும் ஏற்கனவே இருக்கின்ற காரணத்தால் ஏனையவர்களை நாங்கள் ஒன்று சேர்த்து ஓர் அமைப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் செயற்படுவதாக நாங்கள் முடிவெடுத்திருக்கின்றோம்” எனவும், அவர் தெரிவித்தார்.

அந்த வகையில், அவர்களை இணைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இனிவரும் காலங்களில் அரசியல் நீரோட்டத்தில் அவர்கள் இணைத்து எங்களுடைய மக்களுடன் பயணிக்க உள்ளோம்.

அவர்களுடைய சிந்தனை அரசியல் ரீதியாகவும் வெளிப்பட வேண்டும். அவர்களுடைய சிந்தனை எங்களுடைய மக்களுடைய அபிலாசைகளை எங்களுடைய மக்களுடைய அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான வழிமுறைகளை அவர்கள் எல்லோரும், விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட எல்லோரும் இவ்விடயத்தில் ஐக்கியமாக இருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தி நெறிப்படுத்த வேண்டும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பங்குதாரராக இருப்பதற்கு அவர்களுக்கு உறுத்து இருக்கின்றது. அதற்கான வழியை ஏற்படுத்துவதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

ஆகவே இந்த விடயத்தில் எங்களுடைய விடுதலை இயக்கங்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பங்குதாரர்களாக வந்து எந்த நோக்கத்துக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ அதை நல்ல முறையில் கொண்டு செல்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதே எங்களுடைய முயற்சியாக இருக்கின்றது.

வெகு விரைவிலே நாங்கள் இது சம்பந்தமான எல்லோரையும் ஒருங்கிணைத்து விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்கின்ற அனைத்துப் போராளிகளையும் தேசியத்தோடு பயணிக்கின்ற அனைத்துப் போராளிகளையும் நாங்கள் உள்ளடக்கி ஓர் அமைப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஒரு பலமான அதை நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில் எங்களுடைய செயற்பாடுகள் இருக்கும் எனவும், அவர் தெரிவித்தார்.