கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

சுமந்திரன் போன்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது! - செல்வம் போர்க்கொடி

ஆசிரியர் - Admin
சுமந்திரன் போன்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது! - செல்வம் போர்க்கொடி

சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றேன் என்ற மமதையில் இருக்கின்ற ஜனாதிபதி, எமது தேசத்திலே தனது கைகளை நீட்டி செயற்படக் கூடிய சந்தர்ப்பத்தை தமிழ்மக்கள் உருவாக்கக் கூடாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதி சிங்கள தேசத்தின் மீது நம்பிக்கை வைத்ததன் காரணமாக, எமது தேசத்தில் பரிசோதனை முகாம்களும் சோதனைச் சாவடிகளும் முளைத்திருக்கின்றன. மணல் ஏற்றினாலும் சுட்டுக்கொல்லக் கூடிய அதிகாரம் இராணுவத்தினருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

சாதாரண பொதுமகன் எது செய்தாலும் சுடமுடியும் என்ற அதிகாரத்தை முப்படைக்கும் வழங்கி, எமது மக்களை நசுக்கும் செயற்பாட்டை ஜனாதிபதி செய்து வருகிறார். அதனைத் தட்டிக் கேட்பதற்கு கூட்டமைப்பால் மாத்திரமே முடியும். அதற்கு பல வரலாற்று சான்றுகள் இருக்கின்றன.

எனவே கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்கு நாம் எத்தனிக்கக் கூடாது. அரசாங்கத்துடன் வால்பிடிப்பவர்களை நீங்கள் தெரிவு செய்ய வேண்டாம்.

தமிழ்ப் பிரதேசம் என்று எங்குமே இல்லை எனவும், இலங்கையில் யாரும் எங்கும் வாழலாம் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச சொல்கிறார்.

அதற்காகவே கூட்டமைப்பை பலவீனப்படுத்தி சிங்கள உறுப்பினர் ஒருவரை கொண்டு வருவதற்காக கொள்கை இல்லாத சுயேட்சைக் குழுக்களை வன்னியில் களம் இறக்கியிருக்கின்றனர்.

தமிழர்களின் பூர்வீகத்தை உடைப்பதற்காக இந்த செயற்பாடு மேற்கொள்ளபடுகின்றது. எனவே சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றேன் என்ற மமதையில் இருக்கின்ற ஜனாதிபதி, எமது தேசத்திலே தனது கரங்களை நீட்டி செயற்படக் கூடிய சந்தர்ப்பத்தை தமிழ்மக்கள் உருவாக்கக் கூடாது.

அதேவேளை, கூட்டமைப்பில் இருக்கின்ற புல்லுருவிகளை மக்கள் இனங்கண்டு புறந்தள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் தொடர்பாக மோசமான வார்த்தைகளை வெளியில் கூறிய சுமந்திரன் போன்றவர்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாம் தேர்தல் காலங்களிலேயே விடுதலைப் புலிகள் பற்றிப் பேசுவதாக சிலர் சொல்கிறார்கள். ஆனால் நாம் பேசுவோம். அது எமது உரிமை.

வரலாற்றைச் சொல்வதிலே நாம் தயங்கப் போவதில்லை. அதை எப்போதும் எங்கேயும் சொல்லுவோம்” என்றும் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

Radio
×