SuperTopAds

ஜனாதிபதிக்கு காட்டமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள இரா.சம்மந்தன்..!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதிக்கு காட்டமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள இரா.சம்மந்தன்..!

கிழக்கு மாகாணத்தில் மரபுரிமை சொத்துக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட செயலணியில் தமிழர் எவரும் இடம்பெறாமையினை கண்டித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கடிதம் எழுதியுள்ளார். 

இந்த செயலணி கிழக்கு மாகாணத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பில் இரா.சம்பந்தன் இந்த கடிதத்தில் தமது அதிருப்தியை வௌியிட்டுள்ளார்.இலங்கை பல்லின, பல மொழி, பல மதங்கள், 

பல கலாசாரங்கள் உள்ள நாடு என இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இதில் கிழக்கு மாகாணம் பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு மாகாணமாக இருந்த போதிலும், அங்கு தமிழ் பேசுகின்ற மக்களே பெரும்பான்மையாக வாழ்வதாகவும், 

ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணி முற்று முழுதாக சிங்கள உறுப்பினர்களைக் கொண்டுள்ளதால், அது ஒரு இனம் மற்றும் மதத்தின் நலனுக்காக மாத்திரமே நிறுவப்பட்டுள்ளமை புலப்படுவதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்து மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரமல்லாது இலங்கை முழுவதும், வியாபித்து வாழ்வதாக இலங்கை தமிழராகவும் ஒரு இந்துவாகவும் குறிப்பிட விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.விஜயனின் வருகைக்கு முன்னதாகவே திருக்கேதீஸ்வரம், 

முன்னேஸ்வரம், தொண்டீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம் ஆலயங்கள் இலங்கையில் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி இரா.சம்பந்தன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இந்த பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரம் ஆலயம் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் அமைந்துள்ளதாகவும், திருக்கோணேஸ்வரம் ஆலயம் தக்ஷின கைலாயம் என புராணங்களில் விபரிக்கப்பட்டுள்ளதாகவும் 

இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பாரதப் பிரதமர் சரண் சிங் திருகோணேஸ்வரம் ஆலயத்தில் வழிபட்டதன் பின்னர் 

தாம் தக்ஷின கைலாயத்திற்கு வந்துவிட்டேன் என கூறி மகிழ்ந்ததாக இரா.சம்பந்தன் நினைவுகூர்ந்துள்ளார்.இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கிய, 

கிழக்கு மாகாணத்தை சிங்கள மொழி பேசும் பகுதிகளாக மாற்றுவதற்கு கடும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.இந்த விடயத்தை உறுதிப்படுத்தும் வகையில், 

பல்வேறு தரவுகளையும் இரா.சம்பந்தன் தனது கடிதத்தில் இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பை துண்டிப்பதற்கான நடவடிக்கைகள்

மேற்கொள்ளப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வட மாகாணத்திற்கு வௌியே பல இந்து ஆலயங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள இரா.சம்பந்தன், தெற்கில் கதிர்காமம், தொண்டீஸ்வரம், மேற்கில் உள்ள முன்னேஸ்வரம் ஆகிய ஆலயங்களை 

உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார். தொண்டீஸ்வரம் ஆலயம் தற்போது சிதைவடைந்து வருவதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், அதன் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் 

என்னவென கேள்வி எழுப்பியுள்ளார்.தொல்பொருள் திணைக்களம் ஒரு மதத்தையும் அதன் சின்னங்களையும் மாத்திரம் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை துரதிர்ஷ்டவசமானது எனவும் அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் பழமையான பௌத்த விகாரைகள் உள்ளதாகவும், முன்னைய காலத்தில் தமிழ் இந்துக்கள் பௌத்த மதத்தை பின்பற்றியமைக்கான சான்றுகள் உள்ளதாகவும் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாக எந்தவொரு காணிகளையும் கையகப்படுத்தாமல், பௌத்த தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பதற்கான எந்தவொரு நடவடிக்கைகையும் எடுப்பதற்கு தாம் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செயற்படுவதன் மூலமே மக்கள் மத்தியில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண முடியும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். இந்தக் கடிதத்தின் பிரதியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இரா.சம்பந்தன் அனுப்பி வைத்துள்ளார்.