SuperTopAds

சேலத்தில் களைகட்டிய மயானக் கொள்ளைத் திருவிழா: - ஆடு, கோழிகளை உயிருடன் கடித்து வேண்டுதல்

ஆசிரியர் - Admin
சேலத்தில் களைகட்டிய மயானக் கொள்ளைத் திருவிழா: - ஆடு, கோழிகளை உயிருடன் கடித்து வேண்டுதல்

சேலம் காக்காயன் சுடுகாட்டில் மாசி மயானக் கொள்ளை திருவிழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. சேலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாமியாடிக் கொண்டு வந்தவர்கள் உயிரோடு கோழி, ஆடுகளை வாய்களால் கடித்து இரத்ததால் உடல் நனைந்து சுடுகாட்டு சாம்பலை அள்ளி பூசி தங்கள் ஆவேசத்தை அடக்கினார்கள். இதைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

சேலத்தில் மாசி அமாவாசையை ஒட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் சிறப்பு சிவ பூஜை செய்து அம்மன் விக்ரகங்களோடு மேல வாத்தியத்தோடு சுடுகாட்டிற்கு எடுத்து வரப்பட்டு மயான பூஜை நடத்தி பெரியாண்டிச்சி அம்மனின் ஆக்ரோஷத்தை தணிப்பது வழக்கம். இந்தத் திருவிழா ஆண்டு தோறும் மாசி அமாவாசை அன்று சேலம் உட்பட சில மாவட்டங்களில் சிறப்பாக நடைபெரும்.

இந்த ஆண்டு சேலம் காக்காயன் சுடுகாட்டிற்கு அஸ்தம்பட்டி, வின்சென்ட், மேட்டுகடை, பழைய பேருந்து நிலையம் போன்ற 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து வந்தார்கள். அவர்கள் மேல வாத்தியங்களோடு பெரியாண்டிச்சி அம்மன் சிலையோடு, சிலர் பெரியாண்டிச்சி அம்மன் வேடம் அணிந்து சாமியாடிக் கொண்டு உயிரோடு கோழிகளையும், ஆட்டுக் குட்டிகளையும் வாயில் கடித்துக் கொண்டு சுடுகாட்டிற்கு வந்தார்கள். இவர்கள் வரும் போது தரையில் படுத்துக் கொண்டால் தாண்டி போவார்கள். அப்படி தாண்டி போனால் தம் மீது உள்ள பிணி, அசுத்த குணங்கள் நீங்குவதாக நம்புகிறார்கள். ரோடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தரையில் படுத்து ஆசி பெறுகிறார்கள். இதை காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தார்கள்.

இதுப்பற்றி தெரிவித்த ஆசைத்தம்பி, ''கோவிலில் சிவ பூசை நடத்தி படையல் எடுத்து வைத்ததும் பலருக்கும் அருள் வந்து விடும். அந்த அருளோடு ஆக்ரோஷமாக சுடுகாட்டிற்கு வருவோம். வரும்போது எப்படி வருகிறோம். என்ன செய்கிறோம் என்று தெரியாது. கோழி, ஆடுகளைக் கடித்து கொண்டு வருவதாக சொல்லுகிறார்கள். ஆனால் அதுப்பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. சுடுகாட்டிற்கு வந்து பூஜை செய்து மனிதனை எரித்த சாம்பலை உடலில் பூசிய பிறகு எங்கள் மீது இருக்கும் அருள் நீங்கி விடும். அதன் பிறகு நாங்கள் சுயநிலைக்கு வருவோம்'' என்றார்.