SuperTopAds

நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும்

ஆசிரியர் - Admin
நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்துள்ளது. அது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தென், மேல் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை: தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்துள்ளது. அது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஆழம் கூடிய கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிதமான கொந்தளிப்பாகக் காணப்படும். காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.