தற்காலிக வைத்தியசாலையான அமெரிக்க ஓபன் டென்னிஸ் வளாகம்!!
உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதால் அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும் வளாகம் தற்காலிக மருத்துவமனையாக மாற இருக்கிறது.
அமெரிக்கா கொரோனா தொடர்பில் போதுமான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணமாக தற்போது இத்தாலி, சீனாவை விட கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில்தான் அதிகரித்து செல்வுலுகின்றது.
தற்போது வரை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் நியூயார்க்கில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள், பலியானோர் எண்ணிக்கை பாதியாகும். இதனால் நியூயார்க் நிர்வாகம் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்து வருகிறது.
மருத்துவமனையில் இடம் இல்லாமல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தவித்து வருகிறார்கள். வரிசையில் நின்ற படுக்கையை உறுதி செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. வென்டிலேட்டர்கள் பற்றாக்குறையால் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.
இதனால் உலகின் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களை வரவழைத்து தற்காலிக மருத்துவமனையாக மாற்ற அமெரிக்கா திட்டுமிட்டுள்ளது. மேலும் பொது இடங்களான பூங்கா போன்றவற்றில் அவசர மருத்துவமனை தயார்படுத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டென்னிஸ் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் அமெரிக்க ஓபன் நடைபெறும் வளாகம் மிகப்பெரியது. இந்த இடத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தை தற்காலிக மருத்துவமனையாக மாற்ற அமெரிக்க டென்னிஸ் அசோசியேசன் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் 350 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றப்படுகிறது.