குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள்!! -மெஸ்சி அறிவுரை-

உயிர் கொல்லி கொரோனா அச்சத்தால் வீடுகளுக்குள் முடங்குபவர்கள் உங்களது குடும்பத்தினருடன் நேரத்தை உற்சாகமாக செலவிடுங்கள். இத்தகைய வாய்ப்பு எப்போதும் கிடைக்காது என்று அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி கூறி உள்ளார்.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் 32 வயதான லயோனல் மெஸ்சி, பார்சிலோனா கிளப்புக்காக விளையாடி வருகிறார்.
கொரோனா அச்சுறுத்தலால் பெரும்பாலான கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டு விட்டதால் மெஸ்சி, தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ஒவ்வொருவருக்கும் இது சிக்கலான காலக்கட்டம். கொரோனா பரவலால் நாம் கவலை அடைந்துள்ளோம்.
உடல் ஆரோக்கியமே எப்போதும் முதலில் முக்கியம். சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வழங்கும் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இதன் மூலம்தான் நாம் கொரோனாவை எதிர்த்து போராட முடியும். நாம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது. வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டிலேயே இருங்கள்.
உங்களது குடும்பத்தினருடன் நேரத்தை உற்சாகமாக செலவிட அற்புதமான வாய்ப்பு இது. இத்தகைய வாய்ப்பு எப்போதும் கிடைக்காது. தற்போதைய மோசமான சூழல் விரைவில் மாறும் என்று நம்புகிறேன்’ என்றார்.