SuperTopAds

பல்கலைக்கழக போதனை சாரா ஊழியர்களின் வேலை நிறுத்த முன்னெடுப்பு

ஆசிரியர் - Admin
பல்கலைக்கழக போதனை சாரா ஊழியர்களின் வேலை நிறுத்த முன்னெடுப்பு

பல்கலைக்கழக போதனை சாரா ஊழியர்களின் வேலைநிறுத்த முன்னெடுப்பு இன்று பெப்ரவரி மாதம் 5ம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் 7ம் திகதி நள்ளிரவு 12 மணிவரையான 48 மணிநேர நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஒன்றிணைந்த போதனைசாரா சங்க சம்மேளனம் அறிவித்தள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு விடுக்கப்பட்ட இந்த அறிவித்தலுக்கு அமைவாக போராட்டம் நடைபெறவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் சிறிதரன் தங்கவேல் தெரிவித்தார்.

இதே நேரம், ஒன்றிணைந்த போதனைசாரா சங்க சம்மேளனம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்களால் 2016.07.27 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் தாங்கள் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட விடயங்களுடனான உடன்பாட்டின் அடிப்படையில் தற்காலிகமாக முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.

அதன்படி மாதாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவினை (MCA) படிப்படியாக அதிகரித்து 2021 ஆம் ஆண்டில் 100% ஆக உயர்த்தும் உடன்பாட்டின்படி MCA கொடுப்பனவில் 2018 ற்கான 20% மற்றும் உடன்பாட்டின் 1 (iv) பகுதியை நிறைவேற்றாமையினால் அதனூடாக சேரவேண்டிய 15% கொடுப்பனவு என மொத்தமாக MCA கொடுப்பனவானது 35% இனால் அதிகரிக்கப்பட வேண்டியிருந்தும், இவ்விடயம் குறித்து எந்தவொரு சுற்று நிருபமும் இதுவரை வெளியிடப்படவில்லை.

அதேவேளை மேற்குறிப்பிட்ட திகதி (2018.01.02, 2018.01.22) கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாத தன்மையையும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உயர்மட்ட பதவிகள் நிரப்பப்படுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத ஒரு தன்மையையும், அவர்கள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளில் காணப்படும் சீரற்ற தன்மையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத தன்மை மற்றும் தனிநபர் தேவைகளை நிவர்த்தி செய்வதில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குக் காணப்படும் அதிகாரங்கள் தவறான விதத்தில் பயன்படுத்தும் தன்மையையும் காணமுடிகின்றது.

இது தொடர்பில் 2018.01.25 ஆம் திகதி அன்று இடம்பெற்ற ஒன்றிணைந்த போதனைசாரா சங்க சம்மேளனத்தின் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கமைய 2018 பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் 7 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரையான 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுதல் அதன் பின்னரும் பொருத்தமான தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில் அனைத்து பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்த முன்னெடுப்பில் ஈடுபடுபதல் என்பன நடைமுறைப்படுத்தப்படவுள்ளன

இதன்படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் மேற்கண்ட தினத்தில் தம் பணி தவிர்த்து அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.