தமிழ் நாட்டில் கரை ஒதுங்கிய மர்மப்படகு! அதிர்ச்சியில் பாதுகாப்புப் படை
தமிழ் நாட்டின் தனுஷ்கோடி பாக்ஜல சந்தி கடற்பகுதியில் இலங்கை பைபர் படகு ஒன்று இன்று காலை ஆளில்லாத நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளில்லாத நிலையில் கரை ஒதுங்கிய குறித்த படகு தொடர்பில் அப்பகுதி பாதுகாப்புத் தரப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே பாக்ஜல சந்தி கடல் பகுதியில் ஆளில்லாத நிலையில் குறித்த படகு கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் இராமேஸ்வரம் சுங்கதுறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனடிப்படையில், சுங்கத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
இதன்போது, கைப்பற்றப்பட்ட பைபர் படகு இலங்கையை சேர்ந்தது எனவும், அதில் சட்ட விரோதமான முறையில் இலங்கையர்கள் யாரேனும் தமிழகத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த படகு தொடர்பில் தனுஸ்கோடி பொலிஸாரால் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போல கீயு பிரிவு மெரைன் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் கைப்பற்றப்படட படகினை, ட்ரெக்டர் மூலம் இராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலங்களில் தமிழக கடலோரை பகுதிகளில் இருந்த சட்டவிரோதமான முறையில தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் என்பன கடத்தப்பட்டும் வரும் நிலையில் இவ்வாறான ஆளில்லா படகு ஒன்று கரையொதுங்கியுள்ளமை அப்பகுதியில் இருக்கும் பாதுகாப்புத் தரப்பினரிடையே கலக்கத்தைத் தோற்றுவித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன