கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

வடக்கு வாக்குகள் இனவாதம் கொண்டவை! - ஜனாதிபதி குற்றச்சாட்டு

ஆசிரியர் - Admin
வடக்கு வாக்குகள் இனவாதம் கொண்டவை! - ஜனாதிபதி குற்றச்சாட்டு

வடக்கில் உள்ள வாக்குகள் கொள்கை ரீதியானவை இல்லை. அவை இனவாதம் கொண்டவை என்று, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களின் ஆசிரியர்கள், நிர்வாகிகளை இன்று சந்தித்துப் பேசிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கிலுள்ள மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதன் ஊடாகவே அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியும்.

வடக்கு, கிழக்கு, தென் பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு சம அளவிலேயே வளப்பங்கீடுகள் வழங்கப்பட வேண்டும். பிரச்சினை என்பது அனைவருக்கும் உள்ளதுதான்.

வடக்கு, கிழக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் ஜெனீவா விடயம் பற்றி அதிகம் பேசி வருகின்றனர்.

பொருளாதாரப் பிரச்சினையே இங்கு அரசியல் பிரச்சினையாக மாற்றம் பெற்றுள்ளது. அதேபோன்று காணாமல் போனவர்கள் பற்றித் தெளிவாக ஆராய வேண்டியுள்ளது. இதுகுறித்து தேடிப்பார்த்ததன் பின்னரே பேச வேண்டும். இராணுவத்திலும் காணாமல் போனவர்கள் உள்ளனர். யுத்தத்தின் அடிப்படையிலேயே காணாமல் போனவர்கள் பற்றிப் பேசப்படுகின்றது.

யுத்த பூமி என்றால் அங்கு காணாமல் போனவர்கள் இருப்பார்கள். இதுகுறித்துத் தெரியாதவர்களே அதிகம் பேசுகின்றனர். தெரிந்திருந்தாலும் அவர்கள் தங்களது தேவைகளுக்காக காணாமல் போனவர்கள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

காணாமல் போனவர்கள் அனைத்துத் தரப்பிலும் உள்ளார்கள். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் யுத்தத்தின்போது காணாமல் போயுள்ளனர். யுத்தத்தின்போது உயிரிழந்த இராணுவ வீரர்களின் சடலங்களை அடையாளம் காணமுடியாதவிடத்து, அவர்களின் சடலங்களை உறவினர்களிடம் கையளிக்க முடியாது.

எனவே இவ்வாறு உயிரிழந்தவர்கள் அனைவரும் அவர்களின் உறவினர்களைப் பொறுத்தவரையில் காணாமல் போனவர்களே. கடந்த காலத்தினைப் பற்றிப் பேசுவதனால் எவ்விதப் பயனும் இல்லை. எதிர்காலம் பற்றியே இனிப் பேசவேண்டும்.

காணாமல் போனவர்கள் கனடாவிலும் இருக்கலாம். ஆகவே இதுகுறித்து நன்கு ஆராய்ந்ததன் பின்னரே தீர்மானம் ஒன்றினை எடுக்கமுடியும். அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என்பதே எனது நிலைப்பாடு.

வடக்கில் உள்ள வாக்குகள் கொள்கை ரீதியானவை இல்லை. அவை இனவாதம் கொண்டவை. அரசியல் நோக்கம் கொண்டவை. எனவே அங்கு சஜித்திற்கு வழங்கப்பட்ட வாக்குகளைத் தவிர்த்துப் பார்த்தால், கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளுக்கு மக்கள் அனுமதி வழங்கவில்லை என்பது புலனாகின்றது.“ என்றும் அவர் கூறியுள்ளார்.

Radio
×