சஜித்துடன் இணைந்து ஆட்சியமைக்க முடியாது! - ஜனாதிபதி

ஆசிரியர் - Admin
சஜித்துடன் இணைந்து ஆட்சியமைக்க முடியாது! - ஜனாதிபதி

சஜித் பிரேமதாசவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க முடியாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்றவகையில் அவர்களுக்குப் பணியாற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. தற்போதைய அரசியலமைப்பில் காணப்படும் சில சிக்கல்களே இதற்குப் பிரதான காரணமாக இருக்கின்றது.

19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நாட்டினை ஆட்சி செய்வதில் பல்வேறு இடையூறுகள் காணப்படுகின்றன. எனவேதான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை வழங்குமாறு மக்களிடம் ஆணை கோரியுள்ளோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் ஏதேனும் செய்யமுடியும் என வாக்களித்த மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். இதற்கு இடையூறு ஏற்படும் போது அதுகுறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

19ஆவது திருத்தத்தின் கீழ் உள்ள அரச ஆட்சி முறையில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைச் சரிசெய்வதற்காகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கோரியுள்ளோம்.

அதேபோன்று, சுயாதீன ஆணைக்குழு என்றால் சுயாதீனமான முறையில் செயற்பட வேண்டும். அதில் எவ்வித அரசியல் தலையீடுகளோ அல்லது அரசியலோ இருக்கக் கூடாது.

கடந்த காலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஒருவர் தனக்கு விருப்பமான முறையில் செயற்பட்டார். அத்துடன், கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. ஏன் அது உருவாக்கப்பட்டது எனத் தெரியவில்லை.

பொலிஸ் அதிகாரிகள் சுயாதீனமான முறையில் செயற்படும் அதிகாரிகள் இல்லையா எனக் கேட்க விரும்புகின்றேன். உதாரணத்திற்கு 38 வருடங்களாக நாட்டில் பணியாற்றியுள்ள பொலிஸ்மா அதிபரை நம்ப முடியாவிட்டால். எப்படி புதிதாக நியமிக்கப்படும் ஆணைக்குழுவினை நம்ப முடியும்?

அதேபோன்று, தற்போது பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனம் தொடர்பாக அதிகமாகப் பேசப்படுகின்றது. தேர்தலினை இலக்குவைத்து இந்த நியமனங்கள் வழங்கப்படவில்லை.

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான நியமனங்கள் அனைத்தும் பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் வழங்கப்படும். தகுதிவாய்ந்தவர்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அரசியல் நோக்கங்களோ அல்லது எவ்விதமான அரசியல் தலையீடுகளோ இல்லை என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கின்றேன்.

தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் பட்டதாரிகளுக்கு பயிற்சி வழங்கும் செயற்பாட்டினை இடைநிறுத்துமாறு அறிவித்துள்ளார். ஏன் அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் ஊடாக தெளிவுபடுத்தவுள்ளோம். பட்டதாரிகளுக்கு பயிற்சி வழங்கும்போது அதற்குத் தடைவிதிக்க முடியாது.

பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை இடைநிறுத்துவதனால் எவ்வித பயன்களும் இல்லை. எனவே இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தெளிவுபடுத்தப்படும்.

தற்போது நாட்டில் நிர்வாக சேவையில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறித்து பலரும் பேசுகின்றனர். நான் நியமித்துள்ள அதிகாரிகளை விடவும் கடந்த அரசாங்கத்தில் அதிகளவானர்கள் நியமிக்கப்பட்டனர். பல்கலைக்கழக நிர்வாகங்களில் கூட கடந்த அரசாங்கத்தில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதுகுறித்து எவரும் பேசவில்லை. குறிப்பாக ஊடகங்களோ, வெளிநாட்டினரோ, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோ இதுபற்றிப் பேசவில்லை.

எனினும் இவர்கள் அனைவரும் தற்போது என்னால் வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் பற்றிப் பேசுகின்றனர். இவையனைத்தும் அரசியலை நோக்காகக் கொண்டவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு