SuperTopAds

டெஸ்ட் தொடரையும் கோட்டை விட்ட இந்தியா

ஆசிரியர் - Editor III
டெஸ்ட் தொடரையும் கோட்டை விட்ட இந்தியா

இந்தியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2 ஆவது போட்டியையும் வென்று தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 242 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பிரித்வி ஷா, புஜாரா, ஹனுமா விஹாரி அரைசதம் அடித்தனர். 

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி  73.1 ஓவர்களில் 235 ரன்களுக்கு அடங்கியது. இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் வலுப்படுத்திக் கொள்ள கிடைத்த பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டு, மீண்டும் தகிடுதத்தம் போட்டனர். தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால் 3 ரன்னிலும், பிரித்வி ஷா 14 ரன்னிலும் வெளியேறினர்.  தொடர்ந்து ஏமாற்றி வரும் கேப்டன் விராட் கோலி 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ரகானே 9 ரன்கள், புஜாரா 24 ரன்கள் என அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 

பின்னர் வந்த கடைநிலை பேட்ஸ்மேன்களும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. இதனால், இந்திய அணி 46 ஓவர்களில் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 132 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  

இதையடுத்து, பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணி 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் இழந்தது. 

ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது நினைவிருக்கலாம். நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, இருபது ஓவர் கிரிக்கெட் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியிருந்தது.