SuperTopAds

வடக்கு, கிழக்கில் உத்தியோகபூர்வ மொழியாகிறது தமிழ்மொழி!

ஆசிரியர் - Editor I
வடக்கு, கிழக்கில் உத்தியோகபூர்வ மொழியாகிறது தமிழ்மொழி!

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியும், ஏனைய ஏழு மாகாணங்களில் சிங்கள மொழியும், உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்படும் விதத்தில் அரசியல் யாப்பு உருவாகப்படவுள்ளது என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்றைய தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ நாம் தற்போது 2017இன் இறுதியிலும் 2018 பிறக்கவும் உள்ள காலப்பகுதியில் உள்ளோம். எதிர்வரும் நாட்களில் பல தேர்தல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. 

இந்த சந்தர்ப்பத்தில் நாம் ஒற்றுமையாகவும் நிதானமாகவும் செயற்பட வேண்டும். பிரதேச சபைகளில் மக்களின் இன விகிதாசாரங்களின் அடிப்படையில் உத்தியோக பூர்வமொழிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். 

அரச அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படுகின்ற கடிதங்கள் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவர்களின் மொழியில் அமைந்திருக்க வேண்டும். அரச உத்தியோகங்களில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இனி இந்த நிலை திருத்தப்பட வேண்டும். 

இவ்வாறான விடயங்கள் மக்களின் சமத்துவத்தை பாதிக்கும் எனவே அரசாங்க அதிகாரிகளும் இவ்விடயத்தில் சமத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.