சா்வதேசத்தை எதிா்த்தால் என்ன நடக்கும் என்பதை அரசாங்கம் இப்போதாவது உணரவேண்டும்..! சரா எம்.பி சபையில் காரசாரம்..

ஆசிரியர் - Editor I
சா்வதேசத்தை எதிா்த்தால் என்ன நடக்கும் என்பதை அரசாங்கம் இப்போதாவது உணரவேண்டும்..! சரா எம்.பி சபையில் காரசாரம்..

சா்வதேசத்தின் எதிா்பாா்ப்புக்களை, நியமங்களை மீறினால் என்ன நடக்கும் என்பதை இலங்கை அரசுக்கு காட்டும் ஒரு நடவடிக்கையாக அல்லது முன் அறிவித்தலாவே இலங்கை இராணுவ தளபதிக்கு எதிரான அமொிக்காவின் பயணத்தடையை நாம் கருதுகின்றோம். 

 பொறுப்புக்கூறலில் இருந்து தப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் இலங்கையைச் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படும் நிலைக்கே இட்டுச்செல்லும் இவ்வாறு நாடாளுமன்றில் நேற்று தெரிவித்தார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

இது குறித்து அவர் நாடாளுமன்றில் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையின் இராணுவத்தளபதியான சவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க அமெரிக்க அரசாங்கம் பயணத்தடையை அறிவித்துள்ளது. 

ஒரு நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பான ஒரு படைத்தளபதி மீது இன்னொரு நாடு பயணத்தடை விதிக்கிறதென்றால் அது சம்பந்தப்பட்ட நாட்டுக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானமென்றே கருதப்படுகிறது. 

அதிலும் சவேந்திர சில்வா மக்களால் தெரிவு செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டவர் என்பதுடன் அவர் தற்போதைய ஜனாதிபதியால் இராணுவப் பிரதானியாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளார். 

இரு ஜனாதிபதிகளின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவருக்கு இன்னொரு நாடு பயணத்தடை விதிக்கிறது என்றால் அது அந்த நாட்டுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்றே கருதவேண்டியுள்ளது. 

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது சவேந்திர சில்வாவைக் கட்டளைத்தளபதியாகக் கொண்டிருந்த 58வது படைப்பிரிவால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் காரணமாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள சாவேந்திர சில்வா மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தீவிரமானவையெனவும், நம்பகத்தன்மை வாய்ந்தவையெனவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரைப் பொறுப்புக் கூறவைக்கவும், பாதுகாப்புத்துறையை சீர்திருத்தவும், 

நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர அதன் பிறகடமைகளை ஆதரிக்கவும் இலங்கை அரசைக் கேட்டுக்கொள்வதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

எனினும் இலங்கை அரசு சவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவையெனவும், ஒரு தலைப்பட்சமானவையெனவும் தெரிவித்து சாவேந்திர சில்வா மீதான பயணத்தடையை நீக்கும் படி கோரியுள்ளது. 

மேலும் வெளிவிவகார அமைச்சு அமெரிக்கத் தூதுவரை அழைத்து மேற்படி தடை தொடர்பாகத் தங்கள் ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பன தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. 

குறிப்பாக 2015ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில், மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் சர்வதேச வழக்குரைஞர்கள், நீதியாளர்கள் துணையுடன் மேற்கொள்ள வேண்டுமெனவும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. 

இப்போது நம்பத்தகுந்ததும், தீவிரமானதுமான ஆதாரங்களின் அடிப்படையிலேயே சவேந்திர சில்வாவுக்கும் அவரின் குடும்பத்துக்கும் பயணத்தடை விதிக்கப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது. 

அதே சவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவையென இலங்கை கூறுகிறது. இரு கருத்துகளும் ஒன்றுக்கொன்று நேர்விரோதமானவை.

2015 ல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், மேற்படி போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் அது மேற்கொள்ளப்படாத நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு இரு தடவைகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. எனினும் கூட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு ஐந்து வருடங்களாகிவிட்டபோதிலும் அது தொடர்பான விடயங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 

அவ்வகையில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்படவில்லை. அதைவிட இலங்கை அந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ஐந்து வருடங்களின் பின்பு தாங்கள் நிராகரிப்பதாகத் தெரிவித்திருந்தது.

ஒரு தரப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டால் அது விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலமே குற்றச்சாட்டுக்கள் உண்மையா பொய்யா என்பதைக் கண்டறியமுடியும். மேற்படி விசாரணைகள் நடத்தப்பட்டு சவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் ஆதாரமற்றவை 

என்பது நிரூபிக்கப்பட்டிருந்தால், அமெரிக்கா பயணத்தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியிருக்கமுடியாது. ஆனால் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை, சர்வதேச மனித உரிமை அமைப்புகள், தமிழ் அரசியல் தலைமைகள் என பல்வேறு தரப்பினரும் விசாரணைகள் மேற்கொள்ளும்படி கோரியும் அது நடத்தப்படவில்லை. 

எனவே இவ்விசாரணைகளை இலங்கை அரசாங்கம் நடத்தாமல் தட்டிக்கழித்து வந்தமையும், தற்சமயம் ஐ.நா தீர்மானத்தையே நிராகரிப்பதாக அறிவித்திருப்பதுக்குமான காரணம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் அரசபடையினரின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் நிரூபிக்கப்பட்டுவிடுமென்ற அச்சம் என்றே நாம் கருதுகிறோம். 

இலங்கை வெளிவிவகார அமைச்சு, சவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையெனத் தெரிவிக்கிறது. 

அமெரிக்காவோ நம்பத்தகுந்த, தீவிரமான ஆதாரங்கள் இருப்பதாக கூறுகிறது. எப்படியிருப்பினும் ஒரு விசாரணையை மேற்கொண்டிருந்தால் அமெரிக்காவால் முன்வைக்கப்படக்கூடிய ஆதாரங்களை முறியடித்திருக்கலாமல்லவா. 

எனவே தான் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் சர்வதேச அரங்கில் நிரூபிக்கப்பட்டுவிடுமென்ற அச்சத்தினாலேயே விசாரணைகள் நடத்தப்படுவது தட்டிக்கழிக்கப்பட்டு வந்ததென்பதை நாம் திடமாக நம்புகிறோம். 

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஏற்கனவே இலங்கையால் அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானத்தை நிராகரித்திருப்பதும் இவ்விடயங்களை மேலும் ஆதாரப்படுத்துகிறது. 

எனவே இலங்கை அரசு சர்வதேச நியமங்களை அலட்சியப்படுத்திவருமானால் எதிர்காலத்தில் சர்வதேசம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளுக்கு இது ஒரு முன்னறிவித்தலெனவே நாம் கருதுகிறோம். 

பொறுப்புக்கூறலில் இருந்து தப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் இலங்கையைச் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படும் நிலைக்கே இட்டுச்செல்லும் என நாம் திடமாக நம்புகிறோம் - என்று கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு