21 பந்தில் அரைசதம்!! -மோர்கன் மீண்டும் சாதனை!!

ஆசிரியர் - Editor III
21 பந்தில் அரைசதம்!! -மோர்கன் மீண்டும் சாதனை!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஆட்டத்தில் 21 பந்துகளில் அரைச்சதம் அடித்து மோர்கன் புதிய சாதனையை படைத்துள்ளார்.

தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது. இதில் முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன் குவித்தது.

கிளாசன் 33 பந்தில் 66 ரன்னும் ( 4 பவுண்டரி, 4 சிக்சர் ), பவுமா 24 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் குயின்டன் டி காக் 24 பந்தில் 35 ரன்னும் (1 பவுண்டரி,4 சிக்சர்), மில்லர் 20 பந்தில் 35 ரன்னும் (3 பவுண்டரி , 2 சிக்சர் ) அடித்தனர்.

பென் ஸ்டோக்ஸ், சாம் கரண் தலா 2 விக்கெட்டும், ஆதில் ரஷீத், மார்க்வுட் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து 5 பந்து எஞ்சியிருந்த நிலையில் 223 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 226 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பேர்ஸ்டோவ் 34 பந்தில் 64 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்) , கேப்டன் மார்கன் 22 பந்தில் 57 ரன்னும் ( 7 சிக்சர்), பட்லர் 29 பந்தில் 57 ரன்னும் ( 9 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

நிகிடி 2 விக்கெட்டும், பெகுல்வாயோ, ‌ஷம்சி, பிரிட்டோரியஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

கடைசி கட்டத்தில் மார்கனின் அதிரடியான ஆட்டம் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. பென் ஸ்டோக்ஸ் அவருக்கு உதவியாக (12 பந்தில் 22 ரன்) இருந்தார்.

மார்கன் 21 பந்தில் அரை சதம் அடித்தார். ஏற்கனவே அவர் கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 21 பந்தில் 50 ரன் எடுத்து இருந்தார். 20 ஓவரில் அதிவேகத்தில் அரை சதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை மார்கன் மீண்டும் படைத்தார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4-வது அதிவேக அரைசதமாகும். கெய்ல் 17 மற்றும் 20 பந்திலும், வார்னர் 19 பந்திலும் அரை சதம் அடித்து இருந்தனர்.

அதிரடி மூலம் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை மார்கன் தட்டிச்சென்றார்.

இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்றக் கணக்கில் கைப்பற்றியது. அந்த அணி 2-வது ஆட்டத்திலும் 2 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. தென் ஆப்பிரிக்கா முதல் போட்டியில் 1 ரன்னில் வென்றது.

ஏற்கனவே டெஸ்ட் தொடரையும் இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்து இருந்தது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு