ராகுல் சதம் - நியூசி.க்கு 297 ரன்கள் இலக்கு

3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 297 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணையித்துள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. ஆனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான 3வது ஆட்டம் மவுண்ட் மாங்கானுவில் தொடங்கியது.
டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி இந்திய அணியை முதலில் பேட் செய்ய பணித்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். அகர்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பவுண்டரிகளாக அடித்து அதிரடி காட்டிய ஷா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி 9 ரன்னில் நடையை கட்டினார். ஷ்ரேயஸ் அய்யர் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தார். அவர் 63 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நீஷம் பந்தில் அவுட் ஆனார்.
அதன் பின்னர் வந்த கே.எல் ராகுலும், மனீஷ் பாண்டேவும் நிதானாமாக ஆடினர். சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் தனது 4-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 9 போர்கள் மற்றும் 2 சிக்சர்கள் உள்பட 112 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் அடித்து ஆட முயன்ற மனீஷ் பாண்டே 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ஹமிஷ் பென்னட் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதையடுத்து நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.