நியூசிலாந்து அபார வெற்றி!! -மண்கவ்விய இந்தியா-

ஆசிரியர் - Editor III
நியூசிலாந்து அபார வெற்றி!! -மண்கவ்விய இந்தியா-

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.

இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஹமில்டனில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.

உபாதை காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், இன்று தொடக்க வீரர்களாக களம் இறங்கிய இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் சற்று அதிரடியாக ஆடினர். ஆனால் மிகப்பெரிய அளவில் அவர்களால் ஓட்டங்களைக் குவிக்கவில்லை.

பிரித்வி ஷா 20 ஓட்டங்களிலும் அகர்வால் 32 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து அணித்தலைவர் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி இணைந்தது.

நிதானமாக ஆடிய கோலி அரைசதம் கடந்த நிலையில் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதையடுத்து கே.எல் ராகுல் களமிறங்கினார். ஒரு புறம் ஷ்ரேயஸ் ஐயர் நிதானமாக ஆட மறு முனையில் கே.எல் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 107 பந்துகளில் 11 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொருபுறம் அதிரடியாக விளையாடிய ராகுல் 64 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உட்பட 88 ஓட்டங்கள் குவித்தார்.

இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 347 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்கு 348 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக மார்டின் குப்டில், நிகோலஸ் ஆகியோர் வலுவான அடித்தளத்தை அமைத்தனர். நடுவரிசையில் வந்த ரோஸ் டெய்லர் மற்றும் ரொம் லாதம் ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.

இறுதியில் சாட்னர், சிக்ஸரையும் பவுண்டரியையும் பறக்கவிட நியூசிலாந்து அணி 11 பந்துகள் மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்தது.

ரோஸ் டெய்லர் தனது 20 ஆவது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்து, 109 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றிருந்தார்.

நிகோலஸ் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். உலகின் முதன் நிலைப்பந்துவீச்சாளர்களான பும்ரா, சமி போன்றவர்களாலும் இறுதியில் நியூசிலாந்தின் வெற்றியைத் தடுக்க முடியாது போனது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு