SuperTopAds

வடக்கு கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விசேட கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கவேண்டும்!

ஆசிரியர் - Admin
வடக்கு கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விசேட கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கவேண்டும்!

சுனாமிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்பட்டு பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டதோ, அதேபோல யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விசேட கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்குட்டபட்ட பிரதேசங்கள் 40 வருடங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ். புத்தூரில் இடம்பெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே கஜேந்திரகுமார் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இலங்கை அரசைப் பொறுத்தவரையில் அவர்கள் உள்ளூராட்சி சபைக்கு நிதி ஒதுக்குகின்ற பொழுது தென்னிலங்கையின் தற்போதைய நிலையினை வைத்தே வடக்கு கிழக்கிற்கும் நிதி ஒதுக்குகின்றார்கள்.

இந்த உள்ளூராட்சி சபைகளூடாக எதைச் செய்வது என மக்களிடம் கேட்கின்றபோது வீதிகளையாவது போட்டுத்தாருங்கள் என்ற நிலையில் தான் வடக்கு கிழக்கு பிரதேசம் தற்போதும் இருக்கின்றது. இதனைத் தாண்டிய நவீன அபிவிருத்தித் திட்டங்களுக்குள் நகர முடியாதுள்ளது. ஏனெனில் இங்கு அடிப்படைக் கட்டமைப்புக்களே சிதைந்து போயுள்ளன.

இந்த உள்ளூராட்சி சபைகளை சரியான முறையில் கையாள்வதற்கு எமது அமைப்பு நேர்த்தியான தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றினைத் தயாரித்துள்ளது. அந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள அடிப்படை வசதிகளும் அபிவிருத்தித் திட்டங்களும் தென்னிலங்கைக்கும் வடக்கு கிழக்கிற்குமான 40 வருட இடைவெளியை படிப்படியாகக் குறைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமான ஒரு வேலைத்திட்டம், வடக்குக் கிழக்குப் பிரதேசத்தை போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக அடையாளப்படுத்தி விசேட கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கி, அந்தப் பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதற்காக சட்டரீதியான மாற்றங்களை ஏற்படுத்தி சர்வதேச நிதியம் ஒன்றினை உருவாக்கி நிதியினை வெளிநாடுகளில் இருந்து நேரடியாக உள்ளூராட்சி, மாகாண சபைகளூடாகப் பெற்று புனரமைக்கப்பட வேண்டும்- என்றார்.