முஸ்லிம் பயங்கரவாதிகளை அடியோடு அழிப்பேன்..! இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகள் ஒத்துழைக்கவேண்டும்.. மஹிந்த அறைகூவல்..
முஸ்லிம் பயங்கரவாதிகளால் எப்போதும் ஆபத்துண்டு அவா்களை அடியோடு அழிக்கவேண்டியது கட்டாயம் என கூறியிருக்கும் பிரதமா் மஹி ந்த ராஜபக்ச நட்பு நாடுகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டு எனவும் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் ஆளணிகள் பயிற்சிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிக்கொண்டதன் 10ஆம் ஆண்டு நிறைவை இஸ்லாமிய அடிப்படைவாதத் தாக்குதல்கள் காரணமாக கொண்டாட முடியாது போனது.
ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது எமது நாடு மிகச் சிறிய தீவாகும். நிலப்பரப்பு, கடற்படை, விமானப்படையுடன் கூடிய ஒரு தீவிரவாதமே அன்று எமது நாட்டில் காணப்பட்டது.
ஆசியாவில் மக்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதலாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காணப்படுகிறது. எமது நாடு சிறிய தீவாக இருந்தாலும் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் சிறியவையல்ல.
கடந்த 2008ஆம் ஆண்டு மும்பாயில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் இந்தியர்கள் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. எனினும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திய அனைவரும் இலங்கையர்களே.
இந்த அச்சுறுத்தல் எமது நாட்டுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளின் நலனுக்காக இந்த பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும்.
இந்த ஆண்டில் இரண்டு சந்தர்ப்பங்களில் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் படகு மூலம் இந்தியாவுக்குள் நுழைய முயன்றுள்ளதான தகவல்களால் மக்கள் அச்சமடைந்ததுடன்,
இந்தியாவின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்த அச்சுறுத்தலை நம்மால் கட்டுப்படுத்த முடியாவிட்டால், இந்தியா, மாலைதீவு, பங்களாதேஷ், மியன்மார், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நாம் தரையிலும் கடலிலும் வானிலும் செல்ல வேண்டியிருந்தாலும் புதிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புலனாய்வுத்துறையின் நடவடிக்கைகள் அவசியமாகிறது என குறிப்பிட்டார்.