இறந்த பெண்ணின் மருத்துவ ஆவணங்கள் மூலம் மோடியில் ஈடுபட்ட பெண்..! பாரிய மோசடியை அம்பலமாக்கிய மருத்துவர் த.சத்தியமூர்த்தி..
கிளிநொச்சி விவேகானந்த நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் போலியான ஆவணங்கள் மூலம் பெருமளவு நிதியை திரட்ட முயற்சித்த சம்பவத்தை யாழ்.போதனா வைத்தியசா லை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அம்பலப்படுத்தியிருக்கின்றார்.
அதே பகுதியில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண் ஒருவரின் மருத்துவ ஆவணங்களை திருடி அதில் தன்னுடைய பெயர் மற்றும் வயதை மாற்றம் செய்துள்ள குறித்த பெண் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவும்,
அதற்கு சிகிச்சை செய்வதற்காக 2 மில்லியன் ரூபாய் தேவை எனவும் கூறி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம், பொதுமக்கள், புலம்பெயர் தமிழர்கள் வரை பெருமளவானோரை ஏமாற்றி பணம் சம்பாதித்திருக்கின்றார்.
இது குறித்து பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறுகையில், தொண்டையில் கட்டி ஒன்று உள்ளதாகவும், சாப்பிடும்போது அது தடக்குவதாகவும் கூறி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்திருந்தார். அவருக்கு ஈ.என்.டி பரிசோதனை செய்யப்பட்டது.
ஆனால் அவருக்கு எந்தவொரு நோயும் இல்லை. மேலும் அவர் தெல்லிப்பழை வைத்திய சாலையில் சிகிச்சை பெறவில்லை என்பதும், அவரிடமிருந்த மருத்துவ அறிக்கை ஒன்று இந்தியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில்
1 வயது பிள்ளைக்கு எடுக்கப்பட்டது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும் அவரிடமிருந்த ஆவணங்கள் ஏற்கனவே புற்றுநோயினால் இறந்த மதியாபரனம் லாதா என்ற பெண்ணுடையது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன்,
இறந்த பெண்ணி ன் வீட்டுக்கு சென்று மருத்துவ ஆவணங்களை பொய் கூறி திருடியுள்ளார். இறந்த பெண்ணுக்கும் இந்த மோசடி பெண்ணுக்கும் இடையி ல் நட்பு இருந்துள்ளது. இதனடிப்படையிலேயே குறித்த பெண் ஆவணங்களை திருடியிருக்கின்றார்.
திருடிய மருத்துவ ஆவணங்களில் தன்னுடைய பெயரை இணைத்துள்ளதுடன், வயதையும் மாற்றியுள்ளார். ஆனால் திருமணமான லாதாவுக்கு திருமதி என எழுதப்பட்டிருந்ததை திருமணமாகாத இந்த மோசடி பெண் மாற்ற தவறியிருக்கின்றார்.
இவ்வாறான பெண்கள் தொடர்பாக அவதானமாக செயற்படுமாறு கூறியிருக்கும் வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இவ்வாறானவர்களால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களும் உதவி பெற முடியாத நிலை உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களைவே ஏமாற்றி குறித்த பெண் ஆதரவு கேட்டு சிபார்சு கடிதங்களை பெற்றிருக்கின்றமையும் அம்பலமாகியுள்ளது.