மக்களுக்கு உதவ சென்ற கிராமசேவகர் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டு மீனவர்களால் காப்பாற்றப்பட்டார்..! நெடுங்கேணியில் சம்பவம்..
நெடுங்கேணி பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்வையிட்டு மக்களுடைய குறைகளை கேட்க சென்ற கிராமசேவகர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளார்.
பட்டிக்குடியிருப்பு மற்றும் ஊஞ்சல்கட்டி ஆகிய கிராமங்களின் கிராம சேவகராகப் பணியாற்றும் செல்வராயா - சுபாஸ் என்னும் கிராம சேவகரின் இரு பிரிவுகளும் மழையால் பாதித்த நிலையில் ஒரு பிரிவில் பணியாற்றி மறு பிரிவிற்கு உந்துருளியில் பயணித்து
கொண்டிருந்த சமயம் பட்டிக்குடியிருப்பிற்கு அண்மையில் உள்ள நீர் வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டார். இவ்வாறு கிராம சேவகர் அடித்துச் செல்லப்பட்ட சமயம் அந்த ஆற்று நீரில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவர்கள் அவதானித்துள்ளனர்.
இதனால் உடனடியாக மூவர் ஆற்றில் குதித்து நீண்ட போராட்டத்தின் மத்தியில் கிராம சேவகர் காப்பாற்றப்பட்டார். இதன்போது கிராம சேவகரின் உடலில் காயங்கள் ஏற்பட்டதோடு உடமையில் இருந்த கைத் தொலைபேசி மணிப்பேஸ் உட்பட்ட
அணைத்து உடமைகளும் அடித்துச் செல்லப்பட்ட நிலமையிலேயே மீட்கப்பட்டார்.மீனவர்கள் தமது ஆடையை வழங்கி மீட்கப்பட்ட கிராம சேவகரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இதேநேரம் உந்துருளி நீண்ட நேரத்தின் பின்னர் மீட்கப்பட்டமையினால்
முழுமையாக சேதமடைந்தது.