சுன்னாகத்தில் சிக்கிய பிரபல திருடர்கள்..! 15 துவிச்சக்கர வண்டிகள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
சுன்னாகத்தில் சிக்கிய பிரபல திருடர்கள்..! 15 துவிச்சக்கர வண்டிகள் மீட்பு..

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக துவிச்சக்கர வண்டிகளை களவாடிவந்த பிரபல திருடர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், 15 துவிச்சக்கர வண்டிகளை மீட்டிருக்கின்றனர்.

மேற்படி சம்பவம் மேலும் தெரியவருவதாவது,கடந்த-01 ஆம் திகதி பகல் யாழ். இணுவில் தனியார் கல்விநிலையமொன்றின் முன்பாக விடப்பட்டிருந்த மாணவியொருவரின் புதிய துவிச்சக்கர வண்டியொன்று களவாடிச் செல்லப்பட்ட நிலையில் 

இதுதொடர்பாக சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.இதனையடுத்து சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அத்துல கருணாபால, யாழ். மாவட்டச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிகால் தல்துவ மற்றும் 

யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தசநாயக்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பிரகாரம் விரைந்து செயற்பட்ட சுன்னாகம் பொலிஸ் நிலையப் பெருங்குற்றப் பிரிவில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட எழுவர் கொண்ட பொலிஸார் குழுவினர் 

துவிச்சக்கரவண்டி களவுபோன இடத்திலிருந்து சுமார்-200 மீற்றர் தூரத்தில் சந்தேக நபரொருவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர் .அவரிடமிருந்து களவாடப்பட்ட துவிச்சக்கர வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த துவிச்சக்கர வண்டி மல்லாகம் நீதிமன்றம் ஊடாக துவிச்சக்கர வண்டி உரிமையாளரான மாணவியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வேறுபல துவிச்சக்கர வண்டிகளும் 

சந்தேகநபரால் களவாடப்பட்டு கொக்குவில் பூநாறிமடத்தடியைச் சேர்ந்த வேறொரு நபருக்கு விற்கப்பட்டமை தெரியவந்தது. இந்நிலையில் குறித்த சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து களவுபோன மேலும் 14 துவிச்சக்கர வண்டிகளும் 

பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.36 வயதான தெல்லிப்பழைப் பகுதியைச் சேர்ந்த நபரொருவரும், 42 வயதான கொக்குவில் பகுதியைச் சேர்ந்த நபரொருவருமே சுன்னாகம் பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களும் கடந்த- 02 ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதான இரு சந்தேகநபர்களிடமும் 

தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பெருங்குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, துவிச்சக்கர வண்டிகள் திருட்டுத் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே 

செய்யப்பட்ட முறைப்பாடுகளின் பிரகாரம் மீட்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை உரியவர்களிடம் சேர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு