கிழக்கு மாகாணத்தில் குப்பை மேடுகளால் அழியும் யானைகள்..! (சிறப்பு கட்டுரை)

ஆசிரியர் - Editor I
கிழக்கு மாகாணத்தில் குப்பை மேடுகளால் அழியும் யானைகள்..! (சிறப்பு கட்டுரை)

- மயூரப்பிரியன் -

தாவர உண்ணியான காட்டு யானைகள், குப்பைகள் , பொலீத்தீன்கள் , பிளாஸ்ரிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவு பொருட்களை உட்கொள்வதனால் யானைகளின் இறப்பு வீதம் அதிகரித்து வருகின்றது. இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் பெருமளவான காட்டு யானைகள் குப்பை மேடுகளை தேடி உணவுக்காக வருகின்றன. 

சம்மாந்துறை, கல்முனை, காரைத்தீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பகுதிகளில் சேகரிப்படும் குப்பைகளை அஷ்ரப் நகருக்கு அருகில் உள்ள பகுதியில் கொட்டி வருகின்றனர். குறித்த குப்பை மேடு உள்ள பகுதிக்கு அதனை அண்டிய காட்டுப்பகுதியில் இருந்து தினமும் சுமார் 40 யானைகள் 

குப்பைகளை உணவாக உட்கொள்ள வருகின்றன. முன்னர் குறித்த குப்பை மேட்டினை அண்டிய பகுதியில் யானை பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும் , அவற்றை யானைகள் சேதமாக்க்கியுள்ளன. அதனால் தற்போது யானைகள் எவ்வித தடையுமின்றி குப்பை மேடுகளுக்கு வந்து உணவுகளாக கழிப்பொருட்களை உட்கொள்கின்றன. 

அங்கே ஆபத்தான பிளாஸ்ரிக் பொருட்கள் உட்பட உடைந்த கண்ணாடி போத்தல்கள் உள்ளிட்ட ஆபத்தான பொருட்களும் காணப்படுகின்றன. யானை நாளொன்றுக்கு சுமார் 150 கிலோ உணவை உட்கொள்வதாகவும் , 160 லீட்டர் தண்ணீரையும் குடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.காடழிப்பு காரணமாக யானைகள் 

தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி உணவுகளை தேடி அலையும் நிலை காணப்படுகின்றன. அதனால் குப்பை மேட்டை தேடி உணவுக்காக வரும் யானைகள் பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள மக்களின் விவசாய நிலங்களை நோக்கி நகர்ந்து விவசாய நிலங்களை நாசம் செய்வதுடன் , ஊர் மனைக்குள் புகுந்து மனிதர்களுக்கும் 

ஆபத்து விளைவிக்கின்றன. அதனால் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையில் மோதல்களும் ஏற்படுகின்றன. இலங்கையில் சுமார் 6500 யானைகளே உள்ளதாக கணக்கெடுக்கப்பட்ட நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு சுமார் 311 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் , யானைகள் தாக்கியதில் 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 

தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டிற்கு சுமார் 250 யானைகள் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே யானைகளை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. யானைகள் உணவை தேடி குப்பை மேடுகளுக்கு வந்து ஆபத்தான உணவுகளை உட்கொள்கின்றன. அவற்றுக்கு உணவினை பெற்றுகொள்வதற்கான வழிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். 

கழிவு பொருட்களை உட்கொண்டு இறந்த யானைகளின் மரண பரிசோதனையின் போது , அவற்றின் வயிற்றில் இருந்து உக்காத பொலித்தீன்கள், பிளாஸ்ரிக் பொருட்கள் உள்ளிட்ட ஆபத்தான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு குப்பை மேடுகளை நாடி வரும் யானைகளை தடுக்கும் முகமாக " கழிவு பொருட்களை வெளியேற்றும் இடங்களில் 

யானைகள் சுற்றி திரிவதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்" எனும் தலைப்பில் கடந்த 2017 ஆண்டு யூன் மாதம் 7ஆம் திகதி அமப /17/1057/708/014 எனும் அமைச்சரவை விஞ்ஞாபனம் ஒன்றும் வழங்கப்பட்டது. அதன் பிரகாரம் கழிவு பொருட்களை கொட்டும் இடங்களுக்கு யானைகளை வராமல் தடுப்பதற்கு மின்சார வேலிகளை நிர்மாணிப்பது 

எனவும் , அதற்கு உள்ளூராட்சி சபைகளுடன் தொடர்பை ஏற்படுத்தி உரிய வேலை திட்டங்களை முன்னெடுப்பது எனவும் கூறப்பட்டது. ஆனால் அது உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை. அதேவேளை இலங்கையில் வனஜீவராசி வலயத்திற்கு அண்மையான பகுதிகளில் சுமார் 54 இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதாகவும் அவற்றை சூழவுள்ள பகுதிகளில் 

300 யானைகள் சுற்றி திரிவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. புகையிரத விபத்துக்கள் , ஏனைய விபத்துக்களால் ஏற்படும் காயங்கள் , சட்டவிரோதமான முறையில் யானை , குட்டிகளை பிடித்தல் வறட்சியான கால பகுதயில் போதிய நீராகாரம் , உணவுகள் இல்லாமை , காடழிப்பின் போது, யானைக்கூட்டங்கள் பிரிந்து செல்லல் போன்ற காரணங்களால் 

யானையின் இறப்பு வீதம் அதிகரித்து செல்கின்றன. இந்நிலையிலேயே கழிவு பொருட்களை உண்டு உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கின்றன. அம்பாறை குப்பை மேட்டில் கழிவு பொருட்களை உட்கொண்டு யானைகள் உயிரிழப்பை தடுப்பதற்கு குறைந்த பட்சம் அம்பாறை மக்கள் கழிவு பொருட்களை தரம் பிரித்து கொட்டுவதன் 

மூலம் உள்ளூராட்சி சபை ஊழியர்களும் குப்பைகளை தரம் பிரிக்க இலகுவாக இருக்கும். அதனால் ஆபத்தான உக்காத பொலித்தீன் , பிளாஸ்ரிக், காண்ணாடி பொருட்களை தரம் பிரிப்பதன் ஊடாக யானைகளின் உயிர்களை பாதுக்காப்பது மட்டுமின்றி சுற்று சூழல் பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ள முடியும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு