SuperTopAds

8 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தீயிட்டு கொழுத்தப்பட்டது..! யாழ்ப்பாணத்தில் முதல் தடவை..

ஆசிரியர் - Editor I
8 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தீயிட்டு கொழுத்தப்பட்டது..! யாழ்ப்பாணத்தில் முதல் தடவை..

யாழ்.மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட சுமாா் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 8 கிலோ ஹெரோயின் தீயிட்டு கொழுத்தப்பட்டிருக்கின்றது. 

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் இந்த ஹெரோயின் அழிக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதியன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடமிருந்து உயிர்க்கொல்லி போதைப் பொருளான ஹெரோயின் 8 கிலோ 128 கிராம் 33 மில்லிக்கிராம் மீட்கப்பட்டதாகக் கடற்படையினர் தெரிவித்தனர். 

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்று 6 இந்திய மீனவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் 

வழக்குத் தொடுனரால் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படாத நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதனால் இந்திய மீனவர்கள் 6 பேரையும் விடுவித்து விடுதலை செய்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கின் சான்றுப்பொருளான 8 கிலோ 128.3 கிராம் ஹெரோயினை தீயிட்டு அழிக்குமாறு மன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டது. 

இந்த நிலையில் ஹெரோயின் போதைப்பொருள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரால் தெரிவு செய்யப்பட்ட இடத்தில் 

அவர் முன்னிலையில் நீதிமன்ற உத்தியோகத்தர்களால் தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டது.